Monday, March 9, 2015

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)

================================================

விஜயவேல் ஊருக்குப் போயும் காது வலி என்று புலம்பியிருக்கிறான். என்னவென்று ஹாஸ்பிடலில் காட்ட, அடித்ததில் காது ஜவ்வு சற்று கிழிந்து விட்டது. வீட்டில் கேட்க, சமாளித்துப் பார்த்து, முடியாமல் உண்மையை ஒத்துக் கொண்டான். விஜயவேல் வீடிற்கு ஒரே ஆண்பிள்ளை. வீட்டில் களேபரம். விஜயவேலின் அப்பா நேராக நாமக்கல் போக்குவரத்து டிப்போ மேனேஜரிடம் சொல்ல, அவர் காலேஜ்க்கு போன் செய்துவிட்டார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, வகுப்பில் வந்து செக்யூரிட்டி வந்து விஜயவேலை என்கொயரிக்காக மறுநாள் கூப்பிட்டார்கள் என்று சொல்லிவிட்டு போனான். என்கொயரிக்கு மேலும் ஒருவர் தேவை என்பதால் நானும் ரவுடிதான் பாத்துக்க என்று வாண்டடாக நானும் பெயர் கொடுத்தேன். அன்றிரவு, செகண்ட் இயர் ஹாஸ்டலில் இருந்து ஒரு செய்தி வந்தது. தெரியாமல் செய்து விட்டதாகவும், என்கொயரியில் பெயரை சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது, தெரியாமல் செஞ்சதா இது என நான் கத்த, விஜயவேல் என்னை மெதுவாகப் பார்த்தான். (அன்னைக்கு என்ன போட்டு புரட்டி எடுத்தாங்க, அப்ப எல்லாம் சும்மா இருந்திட்டு இப்போ என்னடா சவுண்டு விடுற என்ற அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததால்), அமைதியாகி விட்டேன். சில நண்பர்களிடம் இதைப் பற்றி கேட்ட போது, 'வேண்டாம்டா, இப்போ அவங்க பேரை சொல்லிட்டோம்னா, அடுத்த மூணு வருஷம் நிம்மதியா இருக்க முடியாதுடா, எதாவது பிரச்சினை வரும்' என்று நன்றாக தைரியம் (?!) சொன்னனர்.

மறுநாள் காலை 10 மணி. அட்மின் பிளாக்கில் இருந்தோம்.  ஒருவர் கேட்டார்,
"ஏம்ப்பா. இவ்ளோ நடந்திருக்கு எங்க கிட்ட சொல்லியிருக்கக் கூடாது?"
"இல்ல சார், எதுக்கு பிரச்சினைன்னு விட்டுட்டோம்"
"அட என்னப்பா, உன்ன இப்டி போட்டு அடிச்சிருக்காங்க, என்ன பிரச்சினை? நாங்க பாத்துகிறோம். நீ ஆள் யாருன்னு மட்டும் காட்டுப்பா. அவனுங்கள ஒரு வழி பண்ணிரலாம்"
எங்களுக்கு ஹாஸ்டல் நண்பர்கள் சொன்னது ஞாபகம் வந்தது. ஒருவேளை இப்போது நாம் போட்டுவிட்டு, அவர்களை கடுமையாக தண்டித்து, மறுபடியும் நம்மை அடித்தால்? நாங்கள் முடிவு பண்ணினோம். அவர்களை மாட்டி விடப் போவதில்லை என்று.
நான்தான் பேசினேன், "சார் இருட்டுல அடிச்சாங்க. முகம் சரியா ஞாபகமில்லை சார்"
சிரித்துக்கொண்டே, "ஒருத்தர் முகம் கூடவாப்பா ஞாபகம் இல்லை"
"இல்ல சார்"
"ஏம்ப்பா, இப்டி பயபட்றீங்க? ஆம்பள பசங்கதான நீங்க?"
இந்த கேள்வியின் உக்கிரம் எங்களை மிகவும் அவமானப்படுத்தியது. நடப்பது நடக்கட்டும், மாட்டி விடலாம் என்று ஸ்டுடென்ட்ஸ் லிஸ்ட் பார்த்தோம். கொடுமை, எங்களை அடித்த ஒரு நாயின் போட்டோ கூட அந்த லிஸ்டில் இல்லை. குழப்பத்துடன், "சரியாய் தெரியல சார்" என்று சொல்லிவிட்டு ஹாஸ்டல் வந்தோம். விசாரித்தபோது, எங்களை அடித்தவர்கள், நேற்றே ஆபீஸ் பியூனிடம் பணத்தைக் கொடுத்து சரி கட்டி விட்டதாக தெரிந்தது. ஊழல் மலிந்த எங்கள் கல்லூரி நிர்வாகத்தை வைத்துக் கொண்டு, ஒன்றும் கழட்ட முடியாது என்று தெளிவாகப் புரிந்தது. விதியை நொந்து கொண்டு, அந்த சம்பவத்தை மறக்கத் தயாரானோம். மறந்து விட்டோம்.

(நிறைந்தது)

பின்னுரை: இந்த சம்பவத்தைக் கூர்ந்து கவனித்தால், இதிலும் நம் நாட்டின் பாரம்பரிய குணம் இருப்பதை அறியலாம். அது நம் ரத்தத்தில் ஊறிய கோழைத்தனம். அடிக்க வந்தவர்கள் வெறும் 4 பேர். நாங்கள் மொத்தம் 80 பேர். இதில் கால்பங்கு நண்பர்கள் ஒன்று கூடியிருந்தால், அந்த நாய்களை பிரித்து மேய்ந்திருக்கலாம். ஆனால் எது எங்களைத் தடுத்தது? இன்றும் யோசிக்கிறேன், விடை மட்டும் கிடைக்கவில்லை.

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)
==========================================
(மன்னிக்கவும் நண்பர்களே. மிகவும் நீளமான பதிவாக இருப்பதால் இரண்டு பதிவுகளாக போட வேண்டிய நிலை)
ராகிங். கல்லூரிப் பருவத்தைக் கடந்த அனைவரும், ஒரு முறையாவது இந்த கொடுமையை அனுபவித்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பாக்கியசாலிகள். அப்படி நானும், என் நண்பர்களும் ஒருமுறை மாட்டிக் கொண்ட நிகழ்வே இந்த பதிவு.

இன்ஜினியரிங் படிப்பை விட, ராகிங்ஙை நினைத்துதான் எனக்கு அதிக பயம் இருந்தது. போதாக் குறைக்கு, பள்ளி சீனியர்கள் வேறு இன்ஜினியரிங் காலேஜில்தான் ராகிங் நிறைய இருக்கும் என்று பில்ட்-அப் கொடுத்தனர். இதனால் முதல் இரண்டு மாதங்களுக்கு சீனியர் யாரைப் பார்த்தாலும் எச்சில் முழுங்குவேன். ஆனால் கல்லூரி நிர்வாகம் ராகிங்கைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்தது. எங்கு சென்றாலும் செக்யூரிட்டியை அனுப்புவது, இரவு வரை லேக்சரர்களை ஹாஸ்டலில் அமர வைப்பது என்பன. இதனால் ஏறக்குறைய ஐந்து மாதம் ராகிங்கின் நிழல் கூட படாமல் ஜாலியாக இருந்தோம். இருப்பினும் சில சீனியர்கள் எங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு இருக்குடி ஒரு நாள் என்பது போல் இருக்கும். மனதிற்குள் பயம் பீறிட்டாலும், காட்டிக்கொள்ளாமல் இருந்தோம்.
அன்று எங்கள் ஹாஸ்டலே அல்லோல-கல்லோலப் பட்டது. அன்றிரவு இரண்டாமாண்டு சீனியர்கள் ஹாஸ்டலில் புகுந்து, எல்லாரையும் அடி பின்னப் போகிறார்கள் என்று வதந்தி பரவியது. ஆனால், அது வதந்தி இல்லை, 100% உண்மை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனக்கு அப்போதிருந்தே பயம் தொற்றிக் கொண்டது. சும்மாவே பயப்படுவேன். இதைக் கேட்டதிலிருந்து, அடிக்கடி பாத்ரூம்க்கு ஓடிக் கொண்டிருந்தேன். விஜயவேலிடம் ,
"அது எப்படிடா செக்யூரிட்டி இருக்கும்போது உள்ள வர முடியும்" என கேட்டேன்.
"நீ என்ன லூசா சித்தப்பு? போன வாரம் XXXXXX-ஐ (பெயர் ஞாபகம் இல்லை) கூட்டிட்டு போய் புரட்டி எடுத்தாங்க. அப்ப செக்யூரிட்டி இல்லையா?"
"இப்ப என்னடா பண்றது?" யாரிடமும் பதிலுமில்லை. வழியுமில்லை.

என் மேல மட்டும் கை வைக்கட்டும், அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கடா என சவடால் விட்ட வெங்கி, 8 மணிக்கே பின் கேட்டின் வழியாக எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. அவனுடன் சேர்ந்து பாஸ்கர், ஐயர் மற்றும் சிலரும் எஸ்ஸாகி விட்டனர். எனக்கு அதற்கும் தைரியம் இல்லை.

9 மணி. எல்லோரும் மரண பீதியில் இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து, கீழ் பிளாக்கில் ஒரே கூச்சல். B18 கோதண்டம், சீனியர்ஸ் வந்துட்டாங்க. செம அடி விழுதுடா என்று கத்தியவாறு வந்தான். எல்லாருக்கும் அட்ரினலின் வேகமாக சுரந்தது. கீழ் பிளாக்கில் முடித்து விட்டு, சீனியர்கள் மேலே வந்தனர். எங்கள் அறைக்கு வந்தவன் செகண்ட் இயர் EEE கார்த்திக். என் கண்களுக்கு ஜீன்ஸ் போட்ட இடி அமீன் மாதிரி தெரிந்தான், என்ன பண்ணப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க,
"ஏண்டா அப்பவே வரல?"ன்னான்.
"இல்லன்னா, அவர் தான்" என்று என் நண்பன் சொல்ல வந்தாஆஆஆன்ன்ன்ன்.
பளார். பளார். நண்பனின் கன்னம் பழுத்தது.
பொறி கலங்கியது அனைவருக்கும். "எதித்தா பேசுற"!!!
அடுத்த பார்வை என் மேல் விழுந்தது. நான் சிலை போல் நிற்க, எனக்கும் அதேபோல் இரண்டு பளார் விழுந்து, காதில் பூச்சி பறந்தது.

கொஞ்ச நேரம் எங்கு பார்த்தாலும் பளார், தப், டம் சத்தங்கள். இந்த களேபரங்கள் முடிய அறை மணி மன்னிக்க, அரை மணி நேரம் ஆனது. சரி தூங்கலாம் என கிளம்பியபோது விஜயவேல் மட்டும் காதைப் பிடித்துக் கொண்டு, காது ரொம்ப வலிப்பதாக சொன்னான். சரி தூங்குடா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு நான் தூங்கினேன். காலையில் விஜயவேல் ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போதும் காது வலிப்பதாக சொன்னான். பின்னர் திங்கள் காலை 7 மணிக்கு ஹாஸ்டல் வந்தான், கூடவே ஒரு பிரச்சினையோடு.

(அடுத்த பகுதியில் நிறைவுறும்)

Sunday, March 8, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)

மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)
============================================
எங்களை ஏன் விதி இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறது? எங்களை விட வெங்கி மிகவும் மோசமான நிலையில் இருந்தான். நடப்பதை இப்போது சொன்னாலும் பிரச்சினை: செருப்படி விழும். சொல்ல விட்டாலும் பிரச்சினை: ஒருவேளை அப்பாவைக் கூட்டி வருவதுதான் இறுதியென்றால், இதை அப்பவே சொல்ல என்னடா என்று டபுள் செருப்படி விழும். புலம்பிக் கொண்டே இருந்தான்.
"நாளைக்கு எனக்கு சங்கு நிச்சயம்டா"
அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் மட்டும் யோக்கியமா? அதே செருப்படி எங்களுக்கும் நிச்சயம்!

வெங்கியின் அப்பா ஹாஸ்டல்க்கு வந்த போது காலை 7 மணி. எங்களைப் பார்த்து, "எப்படிப்பா இருக்கீங்க?"
"நநல்ல்ல்லாலாலா இருக்கோம்ப்பா"
"ஏன் டல்லா இருக்கீங்க?"
"வந்து, வந்து,டெஸ்ட்க்கு நைட் முழிச்சு படிச்சோம்"
"பரவயில்லையே? மன்த்லி டெஸ்ட்கே இந்த ப்ரிபிரேஷனா? குட்"
எங்கள் மனசாட்சி கெக்காளமிட்டு சிரித்தது.

இதற்க்கு மேல் முடியாது, உண்மையை சொல்லி விடுவது என்று முடிவு செய்து, வெங்கி அப்ரூவர் ஆனான். அப்போதே வெங்கி சுக்கு நூறாய் கிழிக்கப்பட்டான். நாங்கள் கொஞ்சமாய் கிழிக்கப்பட்டோம்.
HOD-ஐப் பார்க்க வெங்கியும், அப்பாவும் காத்துக் கொண்டிருந்தார்கள். முதல் & இரண்டாவது இயர் மாணவர்களிடையே ஏதோ ராகிங் பிரச்சினை ஏற்பட்டு, HOD கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல் பரவியது. அய்யோ, இது வேறயா? இருந்த 1% நம்பிக்கையும் போயிற்று. ஹாஸ்டல் பிரச்சினையை அடுத்து, என் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. 
வெங்கியும், அப்பாவும் HOD அறைக்குள் சென்றனர். நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தோம். உண்மையில் செமெஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட இவ்வளவு பதட்டம் அடைந்ததில்லை. கால் மணி நேரம் கழித்து வந்தார்கள். ஆச்சர்யம், வெங்கி முகத்தில் சிறு பிரகாசம். எங்களுக்குப் புரியவில்லை. அப்பா எங்களை அழைத்தார்.
"இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்கப்பா. வரேன்"
அதிர்ச்சி+குழப்பம்+சந்தோஷம். "என்னாச்சுடா?", நாங்கள் பதற, வெங்கியின் ஃப்ளாஷ்பேக் இங்கே ஆரம்பிக்கிறது. சர்ர்ர்ர்ர்ர்ர்ர். HOD அறை.
"குட் மார்னிங் சார். நான் வெங்கடேசன் ஃபாதர்"
"குட் மார்னிங். உங்க பையன் பண்ணதப் பாத்தீங்களா?"
"கேள்விப் பட்டேன் சார்"
"இவங்களுக்குக் கஷ்டப்பட்டு பாடம் நடத்தி, அதில டெஸ்ட் வச்சா ஸ்கிப் பண்றாங்க. HOD டெஸ்ட்க்கே இந்த மரியாதை"
"சார் என்னது, உங்க டெஸ்ட்க்கு மட்டம் போட்டங்களா? எவ்ளோ திமிர்? இவன சும்மா விடக் கூடாது சார்". அடிக்கக் கை ஓங்குகிறார்.
"சார் ப்ளீஸ் வேணாம்"
"இல்ல சார், இவனுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிடுச்சு. இல்லன்ன HOD உங்க டெஸ்ட்ட ஸ்கிப் பண்ணுவானா? இவன வெட்டிப் போட்டாக் கூடா தப்பில்ல"
"சார் ப்ளீஸ். இந்த ஒரு வாட்டி வி ஃபர்கிவ் தெம்"
"நீங்க சொல்றீங்கனு விட்றேன் சார். இல்லன்னா இவன!!!"
"நான் பாத்துகிறேன் சார். யு கூல் டவ்ன்"
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஃப்ளாஷ்பேக் முடிந்தது.
எங்களுக்கு சந்தோசத்தில் என்ன பண்ணுவதேன்றே புரியவில்லை. HOD அழைத்தார்.
"பாத்தீங்களா? உங்களால பேரன்ட்ஸ்க்கு எவ்ளோ கஷ்டம்"

மவுனம்.
"ஆல்ரைட். திஸ் இஸ் தி லாஸ்ட் டைம். நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல் டே என்ஜாய் பண்ற இந்த த்ரீ டெஸ்ல உங்கள இவ்ளோ படுத்தினதே போதும்னு நினைக்கிறேன். நீங்க என்ன  பண்றீங்கன்னா, TV டெஸ்ட் பேப்பர் எல்லா கொஸ்டின்க்கும் ஆன்ஸர் எழுதி சப்மிட் பண்ணிட்டு, ரெகார்ட்ல சைன் வாங்கிக்கிங்க"
"சார், தேங்க் யு வெரி மச் சார்"
"அத வெங்கடேசன் ஃபாதர்க்கு சொல்லுங்க. யு கேன் லீவ் நவ்".
இவ்வளவு எளிதில் இந்த சிக்கலில் இருந்து மீள்வோமென நினைக்கவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. தூக்கு தண்டனைக் கைதிக்கு திடீரென்று ஜனாதிபதியின் கருணை மனுவின் மூலம் விடுதலை கிடைத்தது போல் இருந்தது. பாரதிராஜா படம் போல், ஒன்றல்ல நிறைய அதிர்ஷ்ட தேவதைகள் என்னைச் சுற்றி ஆடுவது போல் இருந்தது. அப்புறமென்ன, சுகி சிவத்தின் பேச்சைக் கேட்க திறந்த வெளி அரங்கிற்குப் பறந்தோம். 
(முடிந்தது)

பின்னுரை: இப்போது அந்த கேரம் போர்ட் யாரிடம், எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தால் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகள்:
1. TV டெஸ்ட் அன்று கேரம் போர்ட் விளையாட வேண்டாம்.
2. மாட்டிக் கொண்டால், தயவு செய்து HOD மகளிடம் பேச வேண்டாம்.















மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-3)
===================================
HOD-ன் வீட்டு கேட்டின் முன் நாங்கள் நின்ற போது மணி 5:00. கேட்ட்டைத் தட்டினோம். யோரோ வருவது தெரிந்தது. HOD வருவார் என நினைக்க, ஒரு பெண் வந்தார். வயது 18 இருக்கலாம். HOD-ன் மகளாய் இருக்கலாம்.
"யாருங்க, என்ன வேணும்"
எங்களிடையே மவுனம். யார் பேசுவது என்று குழப்பம். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
சித்தப்பு, பேசுடா என்று கிசுகிசுத்தனர். "டேய், நீங்க பேசுங்கடா"
"நீ ட்ரெஷரர் டா. அதனால நீ பேசினா கரெக்டா இருக்கும்டா"
"உங்களுக்கே ஓவரா இல்லையா. நான் ட்ரெஷரர்னு HOD பொண்ணுக்கு எப்டிடா தெரியும்"
"மாமா,அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்"
"அப்புறமா பாத்து, பாத்துதான்டா  இப்டி கேட் வாசல்ல நிக்கிறோம்"
கேட் திறக்கப் பட்டது. "யாருங்க"
"பீட்டர் சார் இல்லையாங்க"
"அப்பா ஒரு ஃபங்ஷன்க்கு போயிருக்கார், வர்றதுக்கு நைட் ஆகும்".
'சரிங்க, வந்தா நாங்க வந்தோம்னு சொல்லுங்க"
"நீங்க?"
"தேர்ட் இயர் ECE ஸ்டுடென்ட்ஸ்னு சொல்லுங்க"
"ஓகே".
"தேங்க்ஸ்"னு சொல்லிவிட்டு கிளம்பினோம். இந்த பிளானும் புஸ்ஸாகி விட்டதே. அடுத்து என்ன செய்யலாம் என்று பஸ்ஸில் போகும்போது யோசித்தோம். ஒன்றும் சரிப்படவில்லை.
மறுநாள் காலேஜ் போனோம். சுமார் 11 மணிக்கு எங்களை HOD கூப்பிட்டார். அப்பாடா, ப்ளான் வேலை செய்கிறது. பாலசுப்ரமணியம் பெருமை மிகுந்த முகத்துடன் முன்னே செல்ல, நாங்கள் பின் தொடர்ந்தோம். அதிர்ஷ்ட தேவதையை நினைத்துக் கொண்டேன்.
உள்ளே சென்றோம். "வாங்கய்யா"
மெதுவாய் சிரித்தோம்.
"யாருய்யா என் டாட்டர் கிட்ட மிரட்டுற மாதிரி பேசுனது?"
எங்கள் தலையில் சம்மட்டி விழுந்தது. "சார், நாங்க" என இழுத்தோம்.
"தப்பு மேல தப்பு பண்றீங்க. இது காலேஜ் மேட்டர். இத ஏன் நீங்க வீட்ல வந்து பேசணும்? ஐ டோன்ட் லைக் இட்"
நாங்கள் பேயறைந்து நிற்க,
"நீங்க வீட்டுக்கு வர தேவையில்ல. அதுவும் இல்லாம டாட்டர் கிட்ட தேவையில்லாம பேசி, வாட் நான்சென்ஸ்? அதான், தெளிவா சொல்லிட்டேனே, உங்க பேரன்ட்ஸ் இல்லாம வராம ஐ கான்ட் டு எனிதிங். யு கேன் லீவ் நவ்"
அதிர்ஷ்ட தேவதை "போடா, நீயுமாச்சு உன் கேரம் போர்டும் ஆச்சு" என மொத்தமாக பறந்தாள். அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, சாவை எதிர்நோக்கிய தூக்கு தண்டனைக் கைதி போல் இருந்தது எங்கள் நிலை. அப்பாவைக் கூப்பிட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அப்பாவிடம் எப்படி கதையை ஆரம்பிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது,
"இந்த ஐடியா குடுத்த பாலசுப்ரமணியம் எங்கடா. அவனை" என வெங்கி கத்தினான்.
ஆளைக் காணோம். வழக்கமாக 7-B பஸ்ஸில் போகிறவன், அப்போதே எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. எல்லாம் எங்கள் நேரம் என்று நொந்து கொண்டொம்.
மறுபடியும் ஹாஸ்டல். இரவு மணி 8. இன்னும் ஒரு நாளில் ஹாஸ்டல் & காலேஜ் டே வருகிறது. வருடத்தில் இந்த மூன்று நாட்கள் தான் காலேஜ் ஜேஜேவென இருக்கும். நாளை மதியம் சுகி சிவம் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி என்று யாரோ மைக்கில் பேசியது கேட்டது. எதிலும் மனம் லயிக்கவில்லை. 
வெங்கியின் செல்ஃபோன் அடித்தது. எடுத்துக்கொண்டு வெளியே போனான். சற்று நேரம் கழித்து தொங்கிய முகத்துடன் வர,
"என்னாச்சுடா" என்று கேட்டேன்.
"எங்க அப்பா பேசினார்டா, நாளைக்கு காலேஜ் வர்றாராம்."
(தொடரும்)



Saturday, March 7, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)
===================================
7வது 8வது பீரியட்களில் மனது ஒட்டவில்லை. சும்மாவே கவனிக்க மாட்டோம். இதில் HOD சொன்னது மனதில் ரீங்காரமிட, இதை எப்படி சமாளிப்பது என்பதிலேயே மனம் சுற்றியது. காலேஜை முடித்து, ஹாஸ்டல்க்கு வந்து, யாருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. அன்றைய இரவு, எங்கள் மெஸ்ஸில் உருப்படியாக போடப்படும் சப்பாத்தி. நான், ஐயர் எல்லாம் போட்டி போட்டு 10 சப்பாத்தி சாப்பிடுவோம். இந்த பிரச்சினையால் அன்று சரியாக சாப்பிடவில்லை என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. அன்றும் வயிறு முட்ட 10 சப்பாத்தி சாப்பிட்டேன்!!!

சாப்பிட்டு வந்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க செவ்வக மேஜை மாநாடு ஆரம்பித்தது (எங்கள் ரூமில் வட்ட மேஜை கிடையாது!). யோசனைகள், வியூகங்கள், திட்டங்கள் பலவும் வந்தன. சம்பந்தம் இல்லாமல் வெங்கி சிரித்தான். என்னவென்று கேட்டால்,
"இல்ல, நம்மெல்லாம் ஹாஸ்டல்ல இருக்கோம். என்னமாவது சொல்லி சமாளிக்கலாம். டே ஸ்காலர் பாஸ்கர், பாலா-இவனுங்க வீட்டில் சொல்வானுங்கனு நெனச்சேன்."

வெங்கி சொன்னது சிறப்பான இருண்மை நகைச்சுவை(black comedy) என்றாலும், அதை ரசிக்கும் நிலையில் அங்கே யாருமில்லை. சற்று என்னைப் பற்றி யோசித்தேன். நான் படிப்பது, ஹாஸ்டல், மெஸ்-அனைத்தும் கடன். மிக சிரமத்தில்தான் நான் படித்து வந்தேன். இப்போது போய், கேரம் போர்ட் விளையாடி டெஸ்ட்க்கு மட்டம் அடித்ததால், காலேஜில் கூப்பிட்டார்கள் என சொன்னால் செருப்படி விழும். காலேஜ்க்கு வருவது கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நம் கஷ்டப்பட்டு பணம் அனுப்பினால் இவன் இங்கே திமிரெடுத்து சேட்டை செய்கிறானே என்ற கோபம்தான் அதிகம் வரும். நிச்சயம் அதை சாந்தப் படுத்த முடியாது. கிட்டத்தட்ட அனைவரின் நிலையும் அதே. எனவே பெற்றோரை அழைத்து வருவது நிச்சயம் முடியாத விஷயம். HOD-ஐ எப்பாடு பட்டாவது சமாளித்தே ஆக வேண்டும். 

எங்கள் செவ்வக மேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. உருப்படியாக யோசனை ஒன்றும் வரவில்லை. ஆனது ஆகட்டும் என தூங்கி விட்டோம். மறுநாள், வேறு வழியே இல்லை. HOD-யை போய் பார்ப்பது என முடிவு செய்யப் பட்டது. ஆனால் HOD அன்று லீவ். பாலசுப்ரமணியம் ஒரு ஐடியா சொன்னான்.
"மாமா (என்னைத்தான்), நம்ம போய் HOD-ஐ வீட்டில் பார்த்தா என்ன?"
நாங்கள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தோம். வீட்டில் எப்படியும் நல்ல மூடில் இருப்பார். நாம் போய் பார்த்து மன்னிப்பு கேட்டால், மனமிறங்கி வர சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதாகச் சொன்னான். சரியோ, தவறோ முயன்று பார்க்கலாம் என்று HODஐ பார்க்க சித்தோடு கிளம்பினோம். திரும்பவும் அதிர்ஷ்ட தேவதை அருகில் வருவது போல் தெரிந்தது. ஆனால், விதி HOD-ன் மகள் வடிவத்தில் அங்கே காத்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)


Friday, March 6, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)
===================================
(வணக்கம் நண்பர்களே. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி காலங்கள் பகுதியின் அடுத்த மினி-தொடர்)

அது ஆறாவது செமஸ்டர். எங்களிடையே அப்போது ஒரு கேரம் போர்ட் புழக்கத்தில் இருந்தது. அதை கேரம் போர்ட் என்று சொன்னால் மற்ற கேரம் போர்ட் எல்லாம் சேர்ந்து அடிக்க வரும். கேரம் போர்ட் பவுடர்க்கு பதிலாக பாண்ட்ஸ், கோகுல் சாண்டல், நைசில் என சகட்டு மேனிக்கு முக-பவுடர்களைப் போட்டதால், கேரம் போர்டின் ஆதார வழவழப்பே தேய்ந்து, ஆங்காங்கே திட்டு-திட்டாய் பேர்ந்து போய், அதன் கடைசி காலங்களை எங்களிடையேகழித்துக் கொண்டிருந்தது. எங்கள் கேரம் போர்டில் பேக்-ஷாட் அடிக்க வேண்டுமானால்,உயிரை வெறுத்து அடிக்க வேண்டும், இல்லையேல் ஸ்ட்ரைக்கர் பாதியிலேயே நின்று விடும். எல்லாம் பாண்ட்ஸ் பவுடர்களின் மகிமை. இப்படி சரித்திர சிறப்பு வாய்ந்த கேரம் போர்ட்தான் எங்களை மூன்று நாள் பாடாய்ப் படுத்தி விட்டது.

அன்று TV என்று அழைக்கப்பட்ட Television Engineering-ன் மாதாந்திர டெஸ்ட். (TV HOD பீட்டர் அவர்களால் கர்ம சிரத்தையுடன் எடுக்கப்பட்ட பேப்பர் என்பது சிறப்பம்சம். ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டு வந்து நடத்துவார்). எங்கள் ரூமில் காலை எழுந்ததே 8 மணிக்கு. நான், ஐயர், வெங்கி, வீராசாமி, பரணி மற்றும் சிலர் (சரியாக ஞாபகம் இல்லை), டெஸ்டுக்கு மட்டம் அடித்து விட்டு கேரம் போர்ட்விளையாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மதியம் வரை விளையாடி விட்டு, 12:40க்கு லஞ்ச் சாப்பிட மெஸ்க்கு போய் விட்டோம். திரும்பி அறைக்கு வந்த போது பால்பாண்டி,

"ஏண்டா டெஸ்ட்க்கு வரல"ன்னான்.

"ஏன்டா, என்னாச்சு"

"கவுன்ட் கம்மியா இருந்ததால, யார் யார் டெஸ்ட்க்கு வரலன்னு HOD லிஸ்ட் எடுத்துட்டு போயிட்டார்டா"

உள்ளுக்குள் பயம் வந்தாலும், "இதெல்லாம் புதுசாடா. பாத்துக்கலாம்".

"நம்ம டெஸ்ட்க்கு போயிருக்கனும்டா. இப்ப பார், தேவையில்லாம பிரச்சினை"ன்னான் வெங்கி.

"சரி விட்ரா, நடப்பதைப் பார்ப்போம்".

டெஸ்ட்க்கு மட்டம் அடித்த கணவான்கள் ஒன்று கூடி, HOD வழக்கமாக இதையெல்லாம் மறந்து விடுவார். அப்படியே கூப்பிட்டாலும், மொத்தமாக சேர்ந்து மன்னிப்பு கேட்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
"சரி, என்னன்னு காரணம் சொல்றது"?
"உடம்பு சரி இல்லன்னு சொல்வோம்"
"அஞ்சு பேருக்கும் ஒன்னாவா? உருப்படியா சொல்றா"
"நைட் ஹோட்டல்ல சாப்டது வயித்துக்கு ஒத்துக்கல, டிசன்ட்ரினு சொல்லலாமா"?
"நம்ப மாட்டார்டா"
"டெஸ்ட்க்கு சரியா படிக்கல. அதனால பயத்தில கட் பண்ணிட்டோம்னு சொன்னா?"
"கொஞ்சம் ஓகேவா படுது. சரி மொதல்ல கூப்பிடட்டும்".

ஆறாவது பீரியட் HOD-யுடையது. மணி 2:30. எங்களுகெல்லாம் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது. கால் மணி நேரம் ஆகியும் HOD வரவில்லை. அதிர்ஷ்ட தேவதை அருகில் இருப்பது போல இருந்தது. அப்போதைய ரெப் E.மணி வந்து,
"டெஸ்ட்க்கு யாரெல்லாம் வரலையோ, அவங்கள HOD கூப்பிடறார்".
அருகில் தெரிந்தது அதிர்ஷ்ட தேவதை இல்லை, ஆப்பு என்று தெரிந்தது. கிளம்பினோம். HOD ரூமில், பாலமுருகன், பாலசுப்ரமணியம், D.பாஸ்கர்- இவர்களைப் பார்த்தபோது, இவர்களுக்கும் மூல காரணம் கேரம் போர்டாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்.

கதவைத் திறந்து உள்ளே சென்றோம். சுமார் கால் மணி நேரம். ருத்ர தாண்டவம் ஆடினார். அடிக்காத குறை. தமிழ், ஆங்கிலம் என பாரபட்சம் இல்லாமல் திட்டினார். HOD அவர்களுக்கு மற்ற மொழிகள் தெரியாமல் இருந்தது நாங்கள் செய்த புண்ணியம் என்று பட்டது. சரி, எல்லாம் முடிந்து மன்னித்து விடுவார் என நம்பிக் கொண்டு இருந்தோம். அதற்க்கும் சேர்ந்தே ஆப்பு வந்தது.
"உங்களை இந்த வாட்டி சும்மா விடக்கூடாது. நீங்க எல்லாரும் உங்க பேரன்ட்ஸக் கூப்பிட்டு வராம, எந்த ரெகார்ட் நோட்லயும் சைன் பண்ண மாட்டேன்"
"சார்" என நாங்கள் இழுக்க,

"கெட் அவுட் ஆல் ஆஃப் யு" என கத்தினார்.

எனக்கு முழுவதும் இருட்டிக் கொண்டு வந்தது.

(தொடரும்)