Monday, March 9, 2015

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (நிறைவுப் பகுதி)

================================================

விஜயவேல் ஊருக்குப் போயும் காது வலி என்று புலம்பியிருக்கிறான். என்னவென்று ஹாஸ்பிடலில் காட்ட, அடித்ததில் காது ஜவ்வு சற்று கிழிந்து விட்டது. வீட்டில் கேட்க, சமாளித்துப் பார்த்து, முடியாமல் உண்மையை ஒத்துக் கொண்டான். விஜயவேல் வீடிற்கு ஒரே ஆண்பிள்ளை. வீட்டில் களேபரம். விஜயவேலின் அப்பா நேராக நாமக்கல் போக்குவரத்து டிப்போ மேனேஜரிடம் சொல்ல, அவர் காலேஜ்க்கு போன் செய்துவிட்டார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க, வகுப்பில் வந்து செக்யூரிட்டி வந்து விஜயவேலை என்கொயரிக்காக மறுநாள் கூப்பிட்டார்கள் என்று சொல்லிவிட்டு போனான். என்கொயரிக்கு மேலும் ஒருவர் தேவை என்பதால் நானும் ரவுடிதான் பாத்துக்க என்று வாண்டடாக நானும் பெயர் கொடுத்தேன். அன்றிரவு, செகண்ட் இயர் ஹாஸ்டலில் இருந்து ஒரு செய்தி வந்தது. தெரியாமல் செய்து விட்டதாகவும், என்கொயரியில் பெயரை சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள். எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது, தெரியாமல் செஞ்சதா இது என நான் கத்த, விஜயவேல் என்னை மெதுவாகப் பார்த்தான். (அன்னைக்கு என்ன போட்டு புரட்டி எடுத்தாங்க, அப்ப எல்லாம் சும்மா இருந்திட்டு இப்போ என்னடா சவுண்டு விடுற என்ற அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததால்), அமைதியாகி விட்டேன். சில நண்பர்களிடம் இதைப் பற்றி கேட்ட போது, 'வேண்டாம்டா, இப்போ அவங்க பேரை சொல்லிட்டோம்னா, அடுத்த மூணு வருஷம் நிம்மதியா இருக்க முடியாதுடா, எதாவது பிரச்சினை வரும்' என்று நன்றாக தைரியம் (?!) சொன்னனர்.

மறுநாள் காலை 10 மணி. அட்மின் பிளாக்கில் இருந்தோம்.  ஒருவர் கேட்டார்,
"ஏம்ப்பா. இவ்ளோ நடந்திருக்கு எங்க கிட்ட சொல்லியிருக்கக் கூடாது?"
"இல்ல சார், எதுக்கு பிரச்சினைன்னு விட்டுட்டோம்"
"அட என்னப்பா, உன்ன இப்டி போட்டு அடிச்சிருக்காங்க, என்ன பிரச்சினை? நாங்க பாத்துகிறோம். நீ ஆள் யாருன்னு மட்டும் காட்டுப்பா. அவனுங்கள ஒரு வழி பண்ணிரலாம்"
எங்களுக்கு ஹாஸ்டல் நண்பர்கள் சொன்னது ஞாபகம் வந்தது. ஒருவேளை இப்போது நாம் போட்டுவிட்டு, அவர்களை கடுமையாக தண்டித்து, மறுபடியும் நம்மை அடித்தால்? நாங்கள் முடிவு பண்ணினோம். அவர்களை மாட்டி விடப் போவதில்லை என்று.
நான்தான் பேசினேன், "சார் இருட்டுல அடிச்சாங்க. முகம் சரியா ஞாபகமில்லை சார்"
சிரித்துக்கொண்டே, "ஒருத்தர் முகம் கூடவாப்பா ஞாபகம் இல்லை"
"இல்ல சார்"
"ஏம்ப்பா, இப்டி பயபட்றீங்க? ஆம்பள பசங்கதான நீங்க?"
இந்த கேள்வியின் உக்கிரம் எங்களை மிகவும் அவமானப்படுத்தியது. நடப்பது நடக்கட்டும், மாட்டி விடலாம் என்று ஸ்டுடென்ட்ஸ் லிஸ்ட் பார்த்தோம். கொடுமை, எங்களை அடித்த ஒரு நாயின் போட்டோ கூட அந்த லிஸ்டில் இல்லை. குழப்பத்துடன், "சரியாய் தெரியல சார்" என்று சொல்லிவிட்டு ஹாஸ்டல் வந்தோம். விசாரித்தபோது, எங்களை அடித்தவர்கள், நேற்றே ஆபீஸ் பியூனிடம் பணத்தைக் கொடுத்து சரி கட்டி விட்டதாக தெரிந்தது. ஊழல் மலிந்த எங்கள் கல்லூரி நிர்வாகத்தை வைத்துக் கொண்டு, ஒன்றும் கழட்ட முடியாது என்று தெளிவாகப் புரிந்தது. விதியை நொந்து கொண்டு, அந்த சம்பவத்தை மறக்கத் தயாரானோம். மறந்து விட்டோம்.

(நிறைந்தது)

பின்னுரை: இந்த சம்பவத்தைக் கூர்ந்து கவனித்தால், இதிலும் நம் நாட்டின் பாரம்பரிய குணம் இருப்பதை அறியலாம். அது நம் ரத்தத்தில் ஊறிய கோழைத்தனம். அடிக்க வந்தவர்கள் வெறும் 4 பேர். நாங்கள் மொத்தம் 80 பேர். இதில் கால்பங்கு நண்பர்கள் ஒன்று கூடியிருந்தால், அந்த நாய்களை பிரித்து மேய்ந்திருக்கலாம். ஆனால் எது எங்களைத் தடுத்தது? இன்றும் யோசிக்கிறேன், விடை மட்டும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment