Friday, March 6, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-1)
===================================
(வணக்கம் நண்பர்களே. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி காலங்கள் பகுதியின் அடுத்த மினி-தொடர்)

அது ஆறாவது செமஸ்டர். எங்களிடையே அப்போது ஒரு கேரம் போர்ட் புழக்கத்தில் இருந்தது. அதை கேரம் போர்ட் என்று சொன்னால் மற்ற கேரம் போர்ட் எல்லாம் சேர்ந்து அடிக்க வரும். கேரம் போர்ட் பவுடர்க்கு பதிலாக பாண்ட்ஸ், கோகுல் சாண்டல், நைசில் என சகட்டு மேனிக்கு முக-பவுடர்களைப் போட்டதால், கேரம் போர்டின் ஆதார வழவழப்பே தேய்ந்து, ஆங்காங்கே திட்டு-திட்டாய் பேர்ந்து போய், அதன் கடைசி காலங்களை எங்களிடையேகழித்துக் கொண்டிருந்தது. எங்கள் கேரம் போர்டில் பேக்-ஷாட் அடிக்க வேண்டுமானால்,உயிரை வெறுத்து அடிக்க வேண்டும், இல்லையேல் ஸ்ட்ரைக்கர் பாதியிலேயே நின்று விடும். எல்லாம் பாண்ட்ஸ் பவுடர்களின் மகிமை. இப்படி சரித்திர சிறப்பு வாய்ந்த கேரம் போர்ட்தான் எங்களை மூன்று நாள் பாடாய்ப் படுத்தி விட்டது.

அன்று TV என்று அழைக்கப்பட்ட Television Engineering-ன் மாதாந்திர டெஸ்ட். (TV HOD பீட்டர் அவர்களால் கர்ம சிரத்தையுடன் எடுக்கப்பட்ட பேப்பர் என்பது சிறப்பம்சம். ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டு வந்து நடத்துவார்). எங்கள் ரூமில் காலை எழுந்ததே 8 மணிக்கு. நான், ஐயர், வெங்கி, வீராசாமி, பரணி மற்றும் சிலர் (சரியாக ஞாபகம் இல்லை), டெஸ்டுக்கு மட்டம் அடித்து விட்டு கேரம் போர்ட்விளையாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மதியம் வரை விளையாடி விட்டு, 12:40க்கு லஞ்ச் சாப்பிட மெஸ்க்கு போய் விட்டோம். திரும்பி அறைக்கு வந்த போது பால்பாண்டி,

"ஏண்டா டெஸ்ட்க்கு வரல"ன்னான்.

"ஏன்டா, என்னாச்சு"

"கவுன்ட் கம்மியா இருந்ததால, யார் யார் டெஸ்ட்க்கு வரலன்னு HOD லிஸ்ட் எடுத்துட்டு போயிட்டார்டா"

உள்ளுக்குள் பயம் வந்தாலும், "இதெல்லாம் புதுசாடா. பாத்துக்கலாம்".

"நம்ம டெஸ்ட்க்கு போயிருக்கனும்டா. இப்ப பார், தேவையில்லாம பிரச்சினை"ன்னான் வெங்கி.

"சரி விட்ரா, நடப்பதைப் பார்ப்போம்".

டெஸ்ட்க்கு மட்டம் அடித்த கணவான்கள் ஒன்று கூடி, HOD வழக்கமாக இதையெல்லாம் மறந்து விடுவார். அப்படியே கூப்பிட்டாலும், மொத்தமாக சேர்ந்து மன்னிப்பு கேட்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
"சரி, என்னன்னு காரணம் சொல்றது"?
"உடம்பு சரி இல்லன்னு சொல்வோம்"
"அஞ்சு பேருக்கும் ஒன்னாவா? உருப்படியா சொல்றா"
"நைட் ஹோட்டல்ல சாப்டது வயித்துக்கு ஒத்துக்கல, டிசன்ட்ரினு சொல்லலாமா"?
"நம்ப மாட்டார்டா"
"டெஸ்ட்க்கு சரியா படிக்கல. அதனால பயத்தில கட் பண்ணிட்டோம்னு சொன்னா?"
"கொஞ்சம் ஓகேவா படுது. சரி மொதல்ல கூப்பிடட்டும்".

ஆறாவது பீரியட் HOD-யுடையது. மணி 2:30. எங்களுகெல்லாம் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது. கால் மணி நேரம் ஆகியும் HOD வரவில்லை. அதிர்ஷ்ட தேவதை அருகில் இருப்பது போல இருந்தது. அப்போதைய ரெப் E.மணி வந்து,
"டெஸ்ட்க்கு யாரெல்லாம் வரலையோ, அவங்கள HOD கூப்பிடறார்".
அருகில் தெரிந்தது அதிர்ஷ்ட தேவதை இல்லை, ஆப்பு என்று தெரிந்தது. கிளம்பினோம். HOD ரூமில், பாலமுருகன், பாலசுப்ரமணியம், D.பாஸ்கர்- இவர்களைப் பார்த்தபோது, இவர்களுக்கும் மூல காரணம் கேரம் போர்டாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்.

கதவைத் திறந்து உள்ளே சென்றோம். சுமார் கால் மணி நேரம். ருத்ர தாண்டவம் ஆடினார். அடிக்காத குறை. தமிழ், ஆங்கிலம் என பாரபட்சம் இல்லாமல் திட்டினார். HOD அவர்களுக்கு மற்ற மொழிகள் தெரியாமல் இருந்தது நாங்கள் செய்த புண்ணியம் என்று பட்டது. சரி, எல்லாம் முடிந்து மன்னித்து விடுவார் என நம்பிக் கொண்டு இருந்தோம். அதற்க்கும் சேர்ந்தே ஆப்பு வந்தது.
"உங்களை இந்த வாட்டி சும்மா விடக்கூடாது. நீங்க எல்லாரும் உங்க பேரன்ட்ஸக் கூப்பிட்டு வராம, எந்த ரெகார்ட் நோட்லயும் சைன் பண்ண மாட்டேன்"
"சார்" என நாங்கள் இழுக்க,

"கெட் அவுட் ஆல் ஆஃப் யு" என கத்தினார்.

எனக்கு முழுவதும் இருட்டிக் கொண்டு வந்தது.

(தொடரும்)




No comments:

Post a Comment