Monday, March 9, 2015

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)

ராகிங் என்னும் சாத்தானின் ஆப்பிள் (பகுதி-1)
==========================================
(மன்னிக்கவும் நண்பர்களே. மிகவும் நீளமான பதிவாக இருப்பதால் இரண்டு பதிவுகளாக போட வேண்டிய நிலை)
ராகிங். கல்லூரிப் பருவத்தைக் கடந்த அனைவரும், ஒரு முறையாவது இந்த கொடுமையை அனுபவித்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பாக்கியசாலிகள். அப்படி நானும், என் நண்பர்களும் ஒருமுறை மாட்டிக் கொண்ட நிகழ்வே இந்த பதிவு.

இன்ஜினியரிங் படிப்பை விட, ராகிங்ஙை நினைத்துதான் எனக்கு அதிக பயம் இருந்தது. போதாக் குறைக்கு, பள்ளி சீனியர்கள் வேறு இன்ஜினியரிங் காலேஜில்தான் ராகிங் நிறைய இருக்கும் என்று பில்ட்-அப் கொடுத்தனர். இதனால் முதல் இரண்டு மாதங்களுக்கு சீனியர் யாரைப் பார்த்தாலும் எச்சில் முழுங்குவேன். ஆனால் கல்லூரி நிர்வாகம் ராகிங்கைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்தது. எங்கு சென்றாலும் செக்யூரிட்டியை அனுப்புவது, இரவு வரை லேக்சரர்களை ஹாஸ்டலில் அமர வைப்பது என்பன. இதனால் ஏறக்குறைய ஐந்து மாதம் ராகிங்கின் நிழல் கூட படாமல் ஜாலியாக இருந்தோம். இருப்பினும் சில சீனியர்கள் எங்களைப் பார்க்கும் போது, உங்களுக்கு இருக்குடி ஒரு நாள் என்பது போல் இருக்கும். மனதிற்குள் பயம் பீறிட்டாலும், காட்டிக்கொள்ளாமல் இருந்தோம்.
அன்று எங்கள் ஹாஸ்டலே அல்லோல-கல்லோலப் பட்டது. அன்றிரவு இரண்டாமாண்டு சீனியர்கள் ஹாஸ்டலில் புகுந்து, எல்லாரையும் அடி பின்னப் போகிறார்கள் என்று வதந்தி பரவியது. ஆனால், அது வதந்தி இல்லை, 100% உண்மை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனக்கு அப்போதிருந்தே பயம் தொற்றிக் கொண்டது. சும்மாவே பயப்படுவேன். இதைக் கேட்டதிலிருந்து, அடிக்கடி பாத்ரூம்க்கு ஓடிக் கொண்டிருந்தேன். விஜயவேலிடம் ,
"அது எப்படிடா செக்யூரிட்டி இருக்கும்போது உள்ள வர முடியும்" என கேட்டேன்.
"நீ என்ன லூசா சித்தப்பு? போன வாரம் XXXXXX-ஐ (பெயர் ஞாபகம் இல்லை) கூட்டிட்டு போய் புரட்டி எடுத்தாங்க. அப்ப செக்யூரிட்டி இல்லையா?"
"இப்ப என்னடா பண்றது?" யாரிடமும் பதிலுமில்லை. வழியுமில்லை.

என் மேல மட்டும் கை வைக்கட்டும், அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்கடா என சவடால் விட்ட வெங்கி, 8 மணிக்கே பின் கேட்டின் வழியாக எஸ்ஸாகி விட்டது தெரிந்தது. அவனுடன் சேர்ந்து பாஸ்கர், ஐயர் மற்றும் சிலரும் எஸ்ஸாகி விட்டனர். எனக்கு அதற்கும் தைரியம் இல்லை.

9 மணி. எல்லோரும் மரண பீதியில் இருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து, கீழ் பிளாக்கில் ஒரே கூச்சல். B18 கோதண்டம், சீனியர்ஸ் வந்துட்டாங்க. செம அடி விழுதுடா என்று கத்தியவாறு வந்தான். எல்லாருக்கும் அட்ரினலின் வேகமாக சுரந்தது. கீழ் பிளாக்கில் முடித்து விட்டு, சீனியர்கள் மேலே வந்தனர். எங்கள் அறைக்கு வந்தவன் செகண்ட் இயர் EEE கார்த்திக். என் கண்களுக்கு ஜீன்ஸ் போட்ட இடி அமீன் மாதிரி தெரிந்தான், என்ன பண்ணப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க,
"ஏண்டா அப்பவே வரல?"ன்னான்.
"இல்லன்னா, அவர் தான்" என்று என் நண்பன் சொல்ல வந்தாஆஆஆன்ன்ன்ன்.
பளார். பளார். நண்பனின் கன்னம் பழுத்தது.
பொறி கலங்கியது அனைவருக்கும். "எதித்தா பேசுற"!!!
அடுத்த பார்வை என் மேல் விழுந்தது. நான் சிலை போல் நிற்க, எனக்கும் அதேபோல் இரண்டு பளார் விழுந்து, காதில் பூச்சி பறந்தது.

கொஞ்ச நேரம் எங்கு பார்த்தாலும் பளார், தப், டம் சத்தங்கள். இந்த களேபரங்கள் முடிய அறை மணி மன்னிக்க, அரை மணி நேரம் ஆனது. சரி தூங்கலாம் என கிளம்பியபோது விஜயவேல் மட்டும் காதைப் பிடித்துக் கொண்டு, காது ரொம்ப வலிப்பதாக சொன்னான். சரி தூங்குடா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு நான் தூங்கினேன். காலையில் விஜயவேல் ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போதும் காது வலிப்பதாக சொன்னான். பின்னர் திங்கள் காலை 7 மணிக்கு ஹாஸ்டல் வந்தான், கூடவே ஒரு பிரச்சினையோடு.

(அடுத்த பகுதியில் நிறைவுறும்)

No comments:

Post a Comment