Saturday, November 29, 2014

உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.

உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.

நேற்று இரவு நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய 'உஸ்தாத் ஹோட்டல்' மலையாளப் படத்தைப் பார்த்தேன். கேரளாவின் புகழ்மிக்க நடிகர் திலகனின் கடைசி படம். தந்தையின் விருப்பத்தை மீறி சுவிட்சர்லாந்தில் சமையல் கலை படிக்கும் துல்கர் சல்மான், தன் தாத்தா திலகனின் நஷ்டத்தில் இயங்கும் ஒரு பழமையான ஹோட்டலை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் ஒன்-லைன். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை. ஆனால் துல்கர், திலகனின் நடிப்பு, தேர்ந்த திரைக்கதை, உறுத்தாத மெல்லிய இசை- இவையெல்லாம் சேர்ந்து ஒரு அருமையான பீல்-குட் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றன.

சினிமாவை நேசிக்கும் பலரும் சொல்வது யாதெனில் ஒரு திரைப்படத்தின் ஆன்மா நல்ல திரைக்கதை. அது சரியில்லையெனில், மற்ற சமாச்சாரங்கள் எதுவும் எடுபடாது. இந்த படத்தில் அது சரியான முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறன். வேண்டா வெறுப்பாக ஹோட்டல் வேலைகளைச் செய்யும் துல்கர், படிப்படியாக தன் தாத்தா ஏன் நஷ்டத்திலும் அந்த ஹோட்டலை நடத்துகிறார் என்று தெரிந்து, அதை ஏற்று நடத்த முன் வருவதை திரைக்கதை அழகாகப் படம் பிடிக்கிறது. இப்படத்தின், மற்றுமொரு பலம் காஸ்டிங். முக்கியமாக துல்கர் சல்மான். காதல், நகைச்சுவை, விரக்தி, கோபம், அழுகை என அனைத்து உணர்சிகளையும் அவரின் கண்களே எளிதாகப் பிரதிபலிக்கின்றன. நடிப்பதற்கு சில காட்சிகளே இருப்பினும், நித்யா மேனன் 'அழகாக' நடித்துள்ளார். நித்யா+துல்கர் காதல் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். உச்சமாக, திலகன் தன் உடல் மொழியின் மூலமே அனாயசமாக நடித்துப் பின்னியிருக்கிறார்.

சமீப காலமாக கேரளாவில் நாயக பிம்பம் தவிர்க்கப்பட்டு இந்த மாதிரியான தரமான படங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் இங்கே? ஒரு சில நல்ல முயற்சிகள் வந்தாலும், சில முட்டாள் நடிகர்கள் தங்கள் நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் (Ex: அஞ்சான், மான் கராத்தே, etc). ஆனால் அவையெல்லாம் படு தோல்வியடைந்து, அவர்கள் முகத்திலேயே கரியைப் பூசி விட்டன. இனி நல்ல திரை மொழி இல்லாமல், வெறும் மாஸ் ஹீரோ, மசாலா, அஞ்சு பாட்டு- நாலு பைட்-மூணு காமெடி என்றெல்லாம் காலத்தை ஓட்ட முடியாது. அந்த வகையில், மலையாளத் திரையுலகம் நம்மை முந்திக் கொண்டது என்றே எண்ணுகிறேன். அதற்க்கு இன்னுமொரு சான்று இந்த 'உஸ்தாத் ஹோட்டல்'.

இந்த படத்தை உலக சினிமா, மாற்று சினிமா என்றெல்லாம் ஜல்லியடிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் உருப்படியாக செலவு செய்து பார்க்கக் கூடிய ஒரு தரமான பொழுது போக்குத் திரைப்படம். அவசியம் பாருங்கள்.

பி.கு. 2012-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருது உட்பட மூன்று தேசிய விருதுகள் மற்றும் பல்வேறு விழாக்களில் விருதுகளைக் குவித்தது.