Wednesday, December 12, 2012

பீட்சா

  நாம் எல்லோருமே குறைந்தது ஒரு பேய் கதை அல்லது பேய் சம்பந்தமான தகவல்களைக் கேட்டிருப்போம். இன்னும் சிலருக்கு நேரடியான அல்லது மறைமுக அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சமீபத்தில் வெளியான 'பிட்சா' படமும் பேய் பற்றியதுதான். ஆனால் வெள்ளை புடவை கட்டிக்கொண்டு ஒரு சோக பாடல், கோர-முகம் கொண்ட பேய், பேய்க்கு ஒரு பிளாஷ்-பேக், கிளைமாக்ஸில் ஹீரோ-ஹீரோயின் மட்டும் தப்பிப்பது போன்று தமிழ் சினிமா கிரைண்டரில் பல முறை அரைக்கப்பட்ட சாதாரண பேய் படம் அல்ல இந்த பீட்சா. ஒரு விசேஷமான பேய் படம். எப்படி? வாங்க பாக்கலாம்.

     மைக்கேல் (விஜய் சேதுபதி) ஒரு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை செய்கிறார். அனு (ரம்யா நம்பீசன்) இவருடைய கர்ப்பமாய் இருக்கும் லிவிங்- டுகெதர் காதலி. ரம்யா நம்பீசன் ஒரு பேய் கதை எழுத்தாளர் (நல்ல கிளப்புங்கடா பீதிய). ஒரு நாள் பீட்சா டெலிவரி செய்ய இரவு நேரத்தில் அண்ணா நகர் போகிறார். பிட்சா ஆர்டர் செய்தவர் ஸ்மிதா (SS music பூஜா). சில்லறை இல்லை என்று அதை எடுக்க வீட்டின் மாடிக்கு போகிறார் ஸ்மிதா. போய் வெகு நேரமாகியும் ஸ்மிதா வரவில்லை என, மைக்கேல் மேலே போகிறார். அங்கே ஸ்மிதா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பவர் வேறு பொய் விடுகிறது. ஒரே ஒரு டார்ச் மட்டும் மைக்கேலிடம் இருக்கிறது. அப்போது ஸ்மிதாவின் கணவர் என்று ஒருவர் வீட்டிற்கு வருகிறார். அவர் மைக்கேலை, "இங்கே நீ என்னடா செய்ற" என்று மிரட்ட, மைக்கேல் நடந்த உண்மையை சொல்கிறார். சரி, வெளிய வாடா என அவர் சொல்ல, கதவு லாக் செய்யபட்டு இருப்பது மைக்கேலுக்கு தெரிகிறது. சாவி எடுக்க மேலே போகும்போது வந்தவரும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மைக்கேலுக்கு பயம் பயங்கரமாக தொற்றிகொள்கிறது. பின் அங்கே ஒரு பெண் குழந்தையை பார்கிறார். அந்த குழந்தையும் காணமல் போகிறது. சிறிது நேரம் களைத்து அந்த வீட்டிற்கு இரு போலீஸ்காரர்கள் வருகிறார்கள். அவர்களிடம் மைக்கேல், வீட்டில் மூன்று பேய் இருப்பதாகவும், நாம் உடனே இந்த வீட்டை விட்டு ஓடலாம் என்று சொல்லுகிறார். ஆனால் போலீஸ், "நீதான மைக்கேல். அனு என்ற பொண்ண கொன்னுட்டு எஸ்கேப் ஆகிட்ட. உன்ன தாண்டா இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தோம். நீ இங்க என்னடா பண்ற?" என்று ஒரு பெரிய குண்டை போடுகிறார்கள். மைக்கேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி முதலில் வீட்டை விட்டு ஓடலாம் என்று முடிவு செய்து ஓட, போலீஸ் விடவில்லை. அவர்களை உதறி விடு மைக்கேல் ஓட, இரு போலீசையும் யாரோ ஒருவர் வீட்டிற்கு உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். கதவு மறுபடியும் மூடி கொள்கிறது. மைக்கேல் பிட்சா கடைக்கு வந்து நடந்த உண்மைகளை சொல்கிறார். அனைவரும் சேர்ந்து அனுவை தேடுகிறார்கள். அனுவுக்கு என்ன ஆனது? அந்த வீட்டில் இருப்பது உண்மையிலேயே பேயா இல்லையா? அந்த போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள்? கடைசியில் மைக்கேல் என்ன ஆனார்? என்பதை தியேட்டர் சென்று பாருங்கள்.

    இந்த ஒரு மாதிரி ஒரு தமிழ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. என் சிறு வயதில் "ஜென்ம நட்சத்திரம்" என்று ஒரு திகில் படம் பார்த்து பயந்தேன். அது "ஓமன்" என்ற ஆங்கில படத்தில் அப்பட்டமான காப்பி எனினும், அந்த சிறு வயதில் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அதற்கு பிறகு நிஜத்தில் பயந்த படம் என்றால் அது இந்த 'பீட்சா' தான். வழக்கமான தமிழ் படத்தில் இருக்கும் குப்பை மசாலா சங்கதிகள் இந்த படத்தில் ரொம்ப கம்மி (ஒரே ஒரு பாடலைத் தவிற). இன்னும் சொல்ல போனால் இண்டர்வல்க்கு முன்னால், என் மனைவி ரொம்பவே பயந்து போனாள். என் கையை இறுகப் பற்றி கொண்டாள் (நான்  ஏற்கனவே பயந்து போய் இருந்தேன் என்பது வேறு விஷயம்).

   விஜய் சேதுபதி, ஒரு அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு பேய் வீட்டில் பயப்படும் போதும், இரண்டாம் பாதியில் பேய்-அறைந்தவன் போல் அலையும் போதும் நல்ல நடிப்பு. ரம்யா நம்பீசனுக்கு அவ்வளவாக நடிக்க ஸ்கோப் இல்லையெனினும், இரண்டாம் பாதியில் திரைக்கதை இவரை வைத்தே சுற்றுகிறது. உச்சமாக, கிளைமாக்ஸில் இவர் என்ன ஆகிறார் என்று பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா என்றே நினைக்க தோன்றும்.

  படத்தில் குறைகள் என்று பார்த்தால், படத்தின் ஆரம்ப அரை மணி நேர காட்சிகள். படத்தின் திரைக்கதையின் ஆதாரத்தையே அசைக்கும் இரண்டு காட்சிகள் படத்தில் உள்ளன. ஆனால் அதற்கான் விளக்கம் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி சொல்லப்படும். உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ஏன் என்று விளங்கும். இந்த மாதிரி சிறு குறைகள் தெரியா வண்ணம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை.

  50 கோடிக்கு மேல் பட்ஜெட், பெரிய நடிகர்கள், பிரமாண்ட காட்சியமைப்புகள் இருந்தும் திரைக்கதையில் சொதப்பினால் படம் பப்படம் என்பதற்கு தாண்டவம், மாற்றான், முகமூடி போன்ற படங்களே சாட்சி. குறைவான பபட்ஜெட், அறிமுக நடிகர்கள் இருந்தாலும் வலுவான் திரைக்கதை இருந்தால் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்பதற்கு 'பீட்சா' ஒரு உதாரணம் (சுந்தர பாண்டியன், அட்டகத்தி பிற லோ-பட்ஜெட் ஹிட் படங்கள்). உண்மையில், முகமூடி படத்திற்கு வலுக்கட்டயமாக என் மனைவியை அழைத்து சென்று செம திட்டு வாங்கினேன். அதற்கு பரிகாரமாய் 'பீட்சா' அழைத்துச் சென்று என் பாவத்தை போக்கி கொண்டேன். பீட்சா பார்த்து விட்டும் என் மனைவி திட்டினாள்; படம் மொக்கை என்று அல்ல, ரொம்ப பயமா இருக்குடா என்று!!!

  ரம்யா நம்பீசன் படத்தில் சொல்லும் ஒரு வசனம்: "பேயை நம்புறதுக்கு எல்லாருக்கும் ஒரு மொமென்ட் வரும். Your moment is waiting". நானும் அதைத்தான் சொல்லுகிறேன். பீட்சா படம் பார்த்து என்ஜாய் பண்ண "Your moment is waiting"!!!


Thursday, March 29, 2012

அரவான்

         கிளாடியேட்டர் படத்தின் இறுதி காட்சி. ரோமின் மாவீரன் மேக்சிமஸ், சீசருடன் போரிட்டு இறந்து விடுவார். அங்கிருக்கும் போர் வீரர்கள் அவரை தங்கள் தோளில் சுமந்து செல்வது போல் காட்சி வரும். பதவி ஆசை பிடித்த ஒரு அரசனின் சூழ்ச்சியால் மாவீரன் மேக்சிமஸ் உயிரை விடும் அந்த காட்சி பார்பவர்கள் மனதை நெகிழ செய்யும். கண்களை குளமாக்கும். ஆனால் அரவான் படத்தில், கிளாடியேட்டர் மாதிரியே ஒரு குறு அரசனின் சொந்த பகைக்காக பலிகடா ஆக்கப்பட்டு உயிரை விடும் நாயகன் 'சின்னா'வை நினைத்து நமக்கு எந்த வித சோகமோ, வருத்தம்மோ ஏற்படுவதில்லை. இந்த இடத்திலேயே அரவான் படத்தின் தோல்வி ஆரம்பிக்கிறது.
          சமீப காலமாக எந்த தமிழ் படத்தையும் ஆங்கில அல்லது உலக திரைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது நடக்கிறது. இது முற்றிலும் சரி இல்லையென்றாலும், நம் தமிழ் இயக்குநர்கள், ஆங்கில மற்றும் உலக திரைப்படங்களில் இருந்து காட்சிகளை சுடும் போது இந்த ஒப்பீடு சரி என்றே தோன்றுகிறது. அரவான் படம் பார்க்கும்போதும் 'அபாகலிப்டோ' மற்றும் 'கிளாடியேட்டர்' படங்களின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் அவ்விரு படங்களின் திரைக்கதை, மேகிங் மற்றும் காஸ்டிங் இவைகளுக்கு முன்னால் அரவான் படம் ஒரு Free கக் குழந்தை தான்.
சாகித்ய அகடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலின் ஒரு பகுதிதான் அரவான். வணிக வியாபாரத்திற்காக கதையில் சில திருத்தங்களுடன் திரைக்கதை அமைத்திருக்கிறார் வசந்த பாலன் (இங்கேயே ஒரு பெரிய சறுக்கல்). காவல் கோட்டம், 18 -ஆம் நூற்றாண்டில் வாழும் கள்வர் & காவலர் பிரிவு தமிழர்களை பற்றிய கதை. கேட்கும்போதே ஆவலும், எதிர்பார்ப்பும் உண்டாக்கும் கதைக்களனை வைத்துக்கொண்டு, படு மொக்கையான திரைக்கதை, அமெச்சூர் தனமான கிராபிக்ஸ், வெறும் இரைச்சலை பொழியும் இசை & தமிழ் சினிமாவின் கிளிஷே காட்சிகளால் அந்த நல்ல கதை களனை வீணடித்து விட்டார்கள்.
          ஒரு கள்ளர் குழுவின் தலைவர் பசுபதி. ஒரு சந்தர்பத்தில் நல்ல திறமையான திருடர் ஆதியை பார்த்து, அவர் திறமையின் பொருட்டு அவரை தன் குழுவில் சேர்த்து கொள்கிறார். பின்னொரு நாள் திருட போகும்போது மாட்டிக்கொள்ளும் பசுபதியை ஆதி காபற்றிகிறார். பின் ஆதி யாரென ப்ளாஷ்பேக்  ஆரம்பிக்கிறது. காவல் காப்பதை தொழிலாக கொண்ட ஒரு ஊரை சேர்ந்தவர் ஆதி. தன் ஊரில் கொலையுறும் விரோதி ஊரை சேர்ந்த பரத்தின் சாவிற்கு பதிலாக ஆதியை பலிகடா ஆக்குவதென அந்த ஏரியா ராஜாவால் முடிவு செய்ய படுகிறது. இதற்கிடையில் தன்சிகாவுடன் காதல் + ரொமா ஸ் + திருமணம் ஆகிறது. பலிக்கு முன்னர் நாள் ஆதி தப்பிக்கிறார். ஆதிக்கு பதிலாக அவர் நண்பரை பலியிடுகின்றனர். ஆனாலும் ஏமாற்றிய ஆதியை கண்டு பிடித்து பலியிட ஊர் காரர்கள் துடிக்கிறார்கள். ஆனால் ஆதி இருபது பசுபதி ஊரில். ஆதி தப்பித்தார, உண்மையான கொலைகாரன் யார், தன்சிகா என்ன ஆனார் என்பது மிச்ச, சொச்ச கதை.
              இவ்வளவு நல்ல கதை இருப்பினும் படம் சொதப்பியதற்கு முக்கிய காரணங்கள்- ஒன்று- மொக்கையான + இழுவையான திரைக்கதை. இரண்டு- படம் கள்வர்களை பற்றியதா, காவலர்களை பற்றியதா என்ற பெரும் குழப்பம். இதில் தூக்கு தண்டனையை ஒழிப்போம் என்ற மெசேஜ் வேறு. பட இறுதியில் எதாவது மெசேஜ் போட்டால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற தமிழ் சினிமாவின் கேவலமான மனோபாவத்தின் வெளிப்பாடு இது.
               படத்தின் பிளஸ் என்றல் ஆதி, பசுபதி மற்றும் கரிகாலனின் நடிப்பு. பசுபதியின் கருப்பு நிற மேனி அவர் பாத்திரத்திற்கு நன்றாக செட் ஆகிறது. முதல் பாதியில் சற்று ஓவர் ஆக்டிங் போல தோன்றினாலும், சிக்ஸ் பேக் உடம்புடன் உழைத்திருக்கிறார் ஆதி. தன்சிகா- ஓகே. நாயகனை ஒரு பெண்ணாவது காதலிக்க வேண்டும் என்ற நம் தமிழ் சினிமா விதிகளுக்குட்பட்ட பெண்ணாக வருகிறார் அர்ச்சனா கவி. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்!!!!
                படத்தின் மற்றொரு  மகா சொதப்பல் இசை. 3 பாடல்கள் மட்டும் ஓகே ராகம். பின்னணி இசை? சப்பாஆஆஆ!! ஒரே இரைச்சல். இந்த மாதிரி படங்களில் இசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர் எப்படி மிஸ் பண்ணினார்? சமீபத்தில் பீரியட் படங்களில் சிறந்த பின்னணி இசை இருந்து நான் பார்த்த படம்- பழசி ராஜா. இசை? வேறு யார்? நம் மாஸ்ட்ரோ இளையராஜா.
                வழக்கமான மசாலா திரைக்கதை, குத்து பாட்டு, பஞ்ச் வசனங்கள் போன்ற குப்பைகள் இல்லாமல் படம் எடுத்தற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி அரவான் ஒரு நார்மல் படமே. வித்தியாசமான கதைக்களனை எடுத்த உடனே, அப்படா, சூப்பர் ஸ்கிரிப்ட் எடுத்தாச்சு, கண்டிப்பா படம் ஓடிடும், நம்ம எப்டி வேணும்னாலும் படம் எடுக்கலாம் என்று நினைக்கும் தமிழ் இயக்குநர்களே, என்னதான் சூப்பர் ஸ்கிரிப்ட் இருந்தாலும் திரைகதையில் சொதப்பினால் உங்கள் படம் பப்படம் தான்.
மதிப்பெண்: 3/10