Tuesday, November 19, 2013

பீட்சா-2: வில்லா

பீட்சா-2: வில்லா - முந்தைய பீட்சா படத்திற்கும் இந்த படத்திற்கும் துளியளவு கூட சம்பந்தம் இல்லை என்றாலும், 'பீட்சா'-ன்னு போட்டால் விளம்பரத்திற்காக உதவும் என நினைத்து விட்டனர். ஆனால் அதுதான் அவர்களுக்கு பெரிய ஆப்பு. விஜய் சேதுபதி + ரம்யா நம்பீசனின் நல்ல நடிப்பு, திகிலூட்டும் காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை என பல அம்சங்கள் நிறைந்த 'பீட்சா' மாதிரி இருக்கும் என்று நினைத்து வந்த பல (என்னையும் சேர்த்து) ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து போவர்கள். கிளைமாக்சில் வரும் அந்த அபாரமான ட்விஸ்ட் சராசரி ரசிகர்கள் எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை. இதுவும் ஒரு குறையே. கடைசி 20 நிமிடம் போல் முதல் பாதியிலும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருந்தால் 'பீட்சா'வை ஓரளவுக்கு நெருங்கி இருக்கலாம். மற்றபடி, தீபாவளிக்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' பார்த்து நொந்து-நூடுல்ஸ் ஆனவர்கள் இந்த 'வில்லா'வை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

Wednesday, August 14, 2013

மெகா சீரியல் கொடுமைகள்

பெரும்பாலான தமிழ் வீடுகள்ல, இரவு நேரத்துல சரியா நமக்கு சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ, மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடர் கண்டிப்பா ஓடிட்டு இருக்கும். அந்த நேரத்தில நம்ம ஏதாவது படமோ இல்ல கிரிக்கெட் மேட்ச்சோ பாக்கணும்னு நெனச்சு TV சேனல மாத்துனா, நைட் சாப்பாடு கிடைக்காம போற அபாயம் உண்டு. அப்படி கருமம் அதில என்னதான் போடறாங்கனு பாத்தா, ஒரு வாரத்துல குடும்பத்துல குழப்பம் வர்றது உறுதி. அப்படி என்ன தான் இருக்குனு நீங்களே பாருங்க.

  • வேலைக்கு போகாமல் OTMP அடிக்க, தன் மச்சானின் காதல் திருமணத்தைக் கெடுப்பது எப்படி? (நாதஸ்வரம்)
  • தன் தோழியின் கணவனுக்கு பிராக்கெட் போட்டு கரெக்ட் பண்ணுவது எப்படி? (உதிரிப்பூக்கள்)
  • தன் கணவனின் குடும்ப சொத்துக்களை அமுக்க, குடுமபம் முழுவதையும் சீரழிப்பது எப்படி? (தெய்வ மகள்)
  • ஒரு குடும்பம், தன் வீட்டு மருமகளை மிக, மிக கேவலமாக நடத்துவது எப்படி? (வம்சம்)
  • பணக்கார பையனை, அவன் சொத்துக்களை அமுக்க, தன் மகளை விட்டு அவனை கரெக்ட் செய்வது எப்படி?
இந்த கொடுமைகள் எல்லாம் சன் டிவியில் வருபவை. மற்ற ஜெயா, விஜய், பாலிமர், ராஜ் டிவிகளில் வரும் கொடுமைகளை மட்டும் பார்த்தால், ஐயோ ராமா!

Monday, March 18, 2013

Django Unchained

வன்முறை அழகியல் (aestheticization of violence)  பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? குவெண்டின் டரன்ட்டினோ பற்றி அறிந்திருந்தால் உங்களுக்கு வன்முறை அழகியல் பற்றி தெரிந்திருக்கும். வன்முறையின் உச்ச கட்டமாக, ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கூட ஒரு கவி நயத்துடன், அழகாகக் காட்டுவதே வன்முறை அழகியல். சம கால இயக்குனர்களில் இதை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர் குவெண்டின் டரன்ட்டினோ. அவரின் சமீபத்திய படமான ஜேங்கோ அன்செயின்டு (Django Unchained) படமும் வன்முறை அழகியலை மையப் படுத்திய படம்தான். அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

Django Unchained படத்தின் கதை? 19-ம் நூற்றாண்டில், கருப்பின அடிமைவாதம் (Black Slavery) உச்சத்திலிருந்த அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின் பின்புலத்தில் நடக்கிறது கதை. Dr. சுல்ட்ஸ் (Christoph Waltz) ஒரு bounty hunter. ஒரு கொள்ளையனை அடையாளம் காண்பிப்பதற்கு, கருப்பு அடிமையான ஜேங்கோவை (Jamie Foxx) கூட்டு சேர்த்துக் கொள்கிறார். இருவரும் சேர்ந்து நிறைய bounty வேட்டை நடத்துகிறார்கள். நிறைய பணம் கிடைக்கிறது. ஜேங்கோ, தன மனைவி ப்ரூம்ஹில்டா (Kerry Washington) ஒரு வெள்ளை பிரபுவிடம் அடிமையாக இருப்பதாக சொல்கிறான். சரி வா, அவளை மீட்கலாம் என்று Dr. சுல்ட்ஸ் சொல்கிறார். இருவரும் கிளம்புகின்றனர். அடுத்து என்ன என்பதை வரும் weekend சத்யம் தியேட்டரிலோ அல்லது torrentz-ல் டவுன்லோட் செய்தோ பார்த்துக் கொள்ளுங்கள்.

சுஜாதாவின் ஒரு பிரபலமான வாசகம்: 'முதல் காட்சியில் இருந்தே கதையை சொல்லிவிடு'. நீண்ட நாட்களுக்குப் பிறகு, நீட்டி முழக்காமல் இரத்தினச் சுருக்கமாக, முதல் காட்சியிலேயே கதை ஆரம்பிப்பதை இந்த படத்தில்தான் பார்த்தேன். அதற்க்கு காரணம் இயக்குனர் டரன்ட்டினோ. அப்போது ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை தன் நேர்த்தியான திரைக்கதையால் அதகளப் படுத்தி இருக்கிறார் டரன்ட்டினோ.

நக்கல் கலந்த வில்லன் கதாபாத்திரத்தை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் நக்கல்+எதற்கும் துணிந்த தைரியம்+கருணை- இவற்றின் கூட்டுக் கலவையாக ஒரு கதாபாத்திரத்தம் இருந்தால்? அவர்தான் Dr. சுல்ட்ஸ்-ஆக நடித்திருக்கும் கிறிஸ்டோப் வால்ட்ஸ் (Christoph Waltz). சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை மீண்டும் அவர் வாங்கியதில் ஆச்சர்யமில்லை. ஜெமி பாக்ஸ்க்கு இதில் சற்று அளவான பாத்திரம் தான். என் ஆதர்ச நாயகன் டிகாப்ரியோ இதில் மெயின் வில்லன் (கெல்வின்). இவர் வில்லன் கேரக்டர்க்கு எப்படி ஒத்து வருவார் என்று நினைத்தேன். ஆனால், ப்ரூம்ஹில்டாவின் தலையில் சுத்தியலை வைத்துக் கொண்டு Dr. சுல்ட்ஸையும், ஜேங்கோவையும் மிரட்டும் போது, டிகாப்ரியோ காட்டும் உக்கிரம் இருக்கிறதே? அப்பாஆஆ!!! மிரண்டு போய் விட்டேன். வில்லனிடம் வழக்கமாக இருக்கும், புத்திசாலி+கொடூர அல்லக்கையாக ஸ்டீபன் என்ற வேடத்தில் சாமுவேல் ஜாக்சன் (Samuel Jackson). அனைவரின் நடிப்பும் அற்புதம்!!!

குறைகள்?  அவ்வப்போது யூகிக்கக் கூடிய காட்சிகள் மற்றும் ஜேங்கோவின் மிகையான ஹீரோயிசம்; இந்த இரு குறைகளை முக்கியமாகச் சொல்லலாம். ஆனால், டரன்ட்டினோவின் அக்மார்க் பன்ச் வசனங்கள், வன்முறை அழகியல், ஸ்டைலிஷான துப்பாக்கி சண்டைகள் மற்றும் பிரதான கதாபாத்திரங்களின் காஸ்டிங்- இவையெல்லாம் சேர்ந்து அந்த இரு குறைகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன. கண்டிப்பாக இந்த படத்தைப் பார்த்து மகிழுங்கள்.

Final Kick: ஜேங்கோ, ஸ்டீபனிடம் கிளைமாக்ஸில் சொல்லும் வசனம்: "நீ 7000, இல்ல 8000, இல்ல 9000, இல்ல 9999 நீக்ரோக்களை பாத்திருப்ப. ஆனால் நான் பத்தாயிரத்தில் ஒருத்தன்டா!".(இதெல்லாம் ஒரு பன்ச் வசனமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதை ஜேங்கோ ஸ்டைலாக சொல்லும்போது உங்களுக்கும் பிடிக்கும்). அதே போல்தான், திரைக்கதை அமைப்பதில் குவெண்டின் டரன்ட்டினோவும் பத்தாயிரத்தில் ஒருவன்.






Monday, March 4, 2013

தமிழகத்தின் டாப் 5 கிரிமினல் குற்றவாளிகள்: Part-1

நம் அன்றாட வாழ்வில் இந்த மாதிரியான பல நபர்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம், சந்திக்கலாம்.

5. 1500 ரூபாய் சீனா மொபைலை வைத்துக் கொண்டு, கூட்டம் நிறைந்த பேருந்தில் போகும்போது முழு சத்தத்தில் குத்து பாட்டு கேட்கும் A.R.ரகுமான்கள்.

4. உடம்பிற்கு எல்லா வகையிலும் கேடு விளைவிக்கும் 'Lays' போன்ற அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத் தீனி சாப்பிட்டால் அவனை ஹை-கிளாஸ் போலவும், எந்த தீங்கும் செய்யாத வேர்க்கடலை பர்பி சாப்பிட்டால் அவனை லோ-கிளாஸ் போல பார்க்கும் அறிவாளிகள்.

3. சுதந்திர தினத்தன்று, சுதந்திரத்திற்காக, நாட்டிற்காக பாடுபட்ட த்ரிஷா, நமீதா, அசின்,  மற்றும் இன்ன பிற நடிகர்-நடிகைகளின் பேட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஓனர்கள், அதைப் பார்க்கும் முட்டாள்கள்.

2. இருக்கின்ற 60 பக்கத்தில், 30 பக்கம் நடிகைகளின் அரைகுறை படங்களைப் போட்டு விட்டு, இறுதியில் "பெண்களை போகப்பொருளாக காட்டுவதே பாலியல் வன்முறையின் முதல் படி" என்று நல்லவன் வேஷம் போடும் பத்திரிக்கை 'விகடன்'கள்.

இறுதியாக

1. பொதுக் கழிப்பிட சுவர்களில் மினி செக்ஸ் கதைகள் மற்றும் ஆபாசக் கிறுக்கல்கள் புரியும் புரட்சி எழுத்தாளர்கள்.

Tuesday, January 1, 2013

2012-ல் நான் பார்த்த படங்கள் Best to Worst

2012-ல் நான் பார்த்த படங்கள் Best to Worst

2012-ன் சிறந்த படம்: பீட்சா- தமிழில் முதன் முதலாக ஒரு நல்ல ஹாரர்-த்ரில்லர் படம் மற்றும் 'The usual suspects' genre-ல் திரைக்கதை அமைத்ததற்காக.

நல்ல படங்கள் 
1. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- 2 1/2 மணி நேரம் இடை விடாது, முகம் சுளிக்காமல் சிரிக்க வைத்தத படம்.
2. தடையறத் தாக்க- நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல கிரைம்- த்ரில்லர் படம். தட-தடக்கும் திரைக்கதை பெரிய பலம்.
3. காதலில் சொதப்புவது எப்படி- சம கால யுவன்-யுவதிகளின் காதலை நல்ல திரைக்கதையுடன் சொன்ன படம்.
4. நான் ஈ- நல்ல கதை-திரைக்கதை இருந்தால் ஹீரோ-ஹீரோயிசம் தேவையில்லை என்று உணர்த்திய படம்.

OK ரக படங்கள் 
1.  நண்பன்- படம் எனக்கு பிடித்திருந்தாலும் த்ரீ இடியட்ஸ் படத்தை ஜெராக்ஸ் எடுத்ததால் OK  ரகத்தில் சேர்கிறது.
2. அம்புலி- இதுவும் ஒரு நல்ல ஹாரர்-த்ரில்லர் படம்தான். ஆனால் பின் பாதியில் குழப்பும் திரைக்கதை + கிளைமாக்ஸ்ஸில் மொக்கை கிராபிக்ஸால் படம் OK  தான்.
3. ஒரு கல் ஒரு கண்ணாடி- நல்ல காமெடி படம் தான். ஆனால் சிரிப்பை தவிற படத்தில் ஏதும் இலலை.
4. வழக்கு என் 18/9- மிகச் சிறந்த படம்தான். ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட சில சோக காட்சிகள், டாக்குமெண்ட்ரி போன்ற ஆரம்ப காட்சிகளால் OK ரகத்தில் சேர்கிறது.
5. நான்- 'Identity Theft' genre-ல் ஒரு நல்ல த்ரில்லர் படம் தான். ஆனால் மெதுவான திரைக்கதை மற்றும் அமெச்சூர் நடிப்பால் சுமார் தான்.
6. சாட்டை- இந்த படத்தின் மையக் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், தம்பி ராமய்யாவின் மிகையான  நடிப்பு மற்றும் தமிழ் சினிமா கிளிசேக்களால் இந்த ரேட்டிங்.
7. துப்பாக்கி- நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ்களை தவிர்த்திருந்தால், ஒரு படி மேலே போயிருக்கும்.
8. சுந்தரபாண்டியன்- தமிழ் சினிமாவின் குப்பை மசாலாக்கள் இல்லாமல் இருந்திருந்தால் நல்ல படம் என்று சொல்லி இருக்கலாம். ஆனாலும் கோர்வையான திரைக்கதையை இந்த படத்தில் பார்த்தேன்.
9. தோனி நாட் அவுட்- கல்வி மாற்றம் பற்றிய படம். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை மெகா-சீரியல் பார்க்கும் ஆன்ட்டிகள் கூட சொல்லும் அளவுக்கு இருந்த இரண்டாம் பாதி திரைக்கதைதான் படத்தின் வில்லன்.

மோசமான படங்கள் 
1. அரவான்-'காவல் கோட்டம்' என்ற நாவலை சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று கந்தரகோலம் ஆக்கிய படம். உச்சமாக, கிளைமாக்ஸில் ஆதியை ஏசு போல சிலுவையைத் தூக்க விட்டதை பார்த்த போது இதுக்கு 'சுறா' படம் பெட்டெர் என்று நினைத்தேன்.
2. வேட்டை- இது 1960-70களில் வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும். இந்த ஆண்டின் மகா மொன்னையான திரைக்கதை எதுவென்றால் கூசாமல் வேட்டையை சொல்லலாம். முத்தி போன சமீரா ரெட்டி ஒரு பெரிய drawback!
3. கலகலப்பு- நல்ல காமெடி படம்  தான். ஆனால் 'Soul Kitchen' என்ற ஜெர்மன் படத்தை வெட்கம்-மானம் இல்லாமல் ஜெராக்ஸ் எடுத்து விட்டு, சொந்த கதை போல் சுந்தர்.C பீலா விட்டதால் மோசமான லிஸ்ட்டில் சேர்கிறது.
4. கும்கி- தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத, அருமையான கதைக்களம். ஆனால் அதை வழக்கம் போல் தமிழ் சினிமாவின் குப்பை காதல்-திரைக்கதையால் கெடுத்த படம். மேலும் காட்டு யானைகளின் இருப்பிடத்தை மனிதர்கள் ஹோட்டல் கட்டி கெடுப்பதால், ஊருக்குள் தண்ணீர், உணவு தேடி வரும் யானைகளை கொல்லப்பட வேண்டிய கொடூர விலங்காக (தன் சுய நலத்திற்காக) காட்டியதால் இந்த ஆண்டின் மற்றுமொரு மோசமான படம்.

மட்டம்-அபத்தம்
1. முகமூடி- டேய், சூப்பர் ஹீரோ படம்னா என்னனு உங்களுக்கு தெரியுமாடா என்று கத்தலாம் போல இருந்தது, படம் முடியும்போது. பேன்ட்டுக்கு மேலே ஜட்டிய போட்டவனெல்லாம் சூப்பர் ஹீரோ இல்லை என்பதை மிஸ்கின்-ஜீவா புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூர மொக்கை படத்தை பொறுமையாக பார்த்தது கூட எனக்கு வருத்தமில்லை. ஆட்டோ சார்ஜ் 300, டிக்கெட் 300, snacks-200, ஹோட்டலில் சாப்டது 200 என 1000 ருபாய் தண்டம் அழுதது மற்றும் இந்த மொக்கை படத்தை பார்த்தது தாங்காமல் என் மனைவி என்னை செம திட்டு திட்டியது என இந்த இரண்டை மட்டும் என்னால் மறக்க முடியாது.