Tuesday, February 25, 2014

நான் இறால் வாங்கினேன்

ஞாயிறு அன்று, இறால் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சே, சரி  இன்னைக்கு சமைச்சு சாப்பிடனும்னு நினச்சேன். வீட்டுக்கு பக்கத்திலயே இருக்கும் மீன் கடையல் சென்று, 'அக்கா, இறால் என்ன விலை?' என்று கேட்டேன். அவர், 'இன்னைக்கு ரொம்ப கம்மி தம்பி! கிலோ 400(!?) தான்' என்றார். 'என்னங்க இது? வழக்கமா 300 தான?' என்று ஏதோ தினம் தினம் இறால் வாங்குபவன் போல் நான் அடித்து விட, அதற்க்கு 'தம்பி, 300 ரூவாக்கு நீ தான் போய் கடல்ல பிடிச்சிட்டு வரணும்' என்று பல்பு கொடுத்தார். நமக்கு பல்பு வாங்குவது புதுசு இல்லையென்றாலும், அருகில் இருந்த 2 பெண்கள் சிரிக்கவும், மனசாட்சி கூண்டில் இருந்த மிருகம் முழித்துக்கொண்டு, 'டேய் அருண்! 400 ரூபாய்க்கு கம்மியா இறால் வாங்கியே ஆகணும்டா!' என்று ஆணையிட்டது. உடனே வேளச்சேரி மீன் மார்க்கெட்டுக்கு ஷேர் ஆட்டோவில் புயலென புறப்பட்டேன். அங்கே கூட்டம் கம்மியா இருந்த கடையில் சென்று, இறால் விலை கேட்டேன். 'சார், 300 ருபீஸ் தான் சார்' என்று சொல்ல, என் மைண்ட் வாய்ஸ் 'சபாஷ்டா அருண். பின்னிட்ட' என்று கூச்சலிட, 'எனக்கு அரை கிலோ' என்று இறாலை அள்ளினேன். 'சார், அது 400 ருபீஸ் சார், 300 ருபீஸ் இறால் இங்க இருக்கு சார்' என சற்று குண்டான மண் புழுவைக் காட்டினான். 'எனக்கு இது தான் வேணும்' என பெரிய சைஸ் இறாலைக் காட், 'அப்ப அரைக் கிலோக்கு 200 கொடுங்க' என்றான் கடைக்காரன். 'என்னப்பா நீ' என சொல்ல வந்து, எங்கே இவன் வலையைக் கொடுத்து கடலில் இறக்கி விட்டுவிடுவானோ என பயந்து, என் மூளை என் மைக்கை off  பண்ணியது. நேரம் 12:20 என்றது என் டைமக்ஸ் வாட்ச். சரி ஆகிறது ஆகட்டும் என Rs.200க்கு அரை கிலோ வாங்கினேன். அதோடு என் தேடல் முடியவில்லை. இறால் தோலை உரிக்க 20, ரொம்ப நேரம் ஆனதால் நான் அருந்திய கரும்பு ஜூஸ் 20, இளநீர் 40, திரும்ப வரும்போது ஷேர் ஆட்டோவும் பஸ்ஸும் இல்லாமல் ஆட்டோ சார்ஜ் 50 என என் கணக்கிலே வராமல் 130 ரூபாய் பணால். ஆட்டோவில் போகும்பது, மொத்த செலவு 330 என்றது என் கணிதம். வீட்டிற்கு போகையில் பக்கத்து கடைக்கார அக்கா, 'என்ன தம்பி? இறால் வாங்கினீங்களா?' என்று கேட்க பதில் பேச என்னிடம் வார்த்தையில்லை என்று இத்தோடு எஸ்கேப் ஆகிக் கொள்கிறேன்.

திரா (Thira) மற்றும் மும்பை போலீஸ் (Mumbai Police)

சென்ற வார இறுதியில் இரு அட்டகாசமான படங்கள் பார்த்தேன். அவற்றைப் பற்றி.

1. திரா (Thira): இந்த படத்தைப் பற்றி  ஒரு பதிவரின் தளத்தில் நல்ல விதமாகப் படித்ததால் பார்த்தேன். மிகவும் இறுக்கமான த்ரில்லெர். இளம் பெண்களையும்,  குழந்தைகளையும் கடத்தி விபசாரத்தில் தள்ளும் (Human trafficking) ஒரு மோசமான கும்பலிடம் இருந்து அவர்கள் கடத்திய பெண்களை ஷோபனா மற்றும் தயன் இருவரும் எப்படி மீட்கிறார்கள் என்பதே மையக்கரு. சுஜாதா சொன்னது போல் படம் எடுத்த உடனே கதையை பளிச்சென சொல்லி விட்டு, இறுதிவரை கோர்வையான திரைக்கதையால் பின்னி எடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டு சாதாரண நபர்கள், பெரும் பணபலம் + அடியாள் பலம் பொருந்திய கும்பலை ஜஸ்ட் லைக் தட் என சமாளிப்பது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும் ஷோபனாவின் தேர்ந்த நடிப்பு மற்றும் மின்னல் வேக சீரான திரைக்கதையின் முன் அவை தெரியவில்லை. தெவையற்ற காமெடி, பாடல்கள் மற்றும் ஆபாசம் எதுவும் இல்லாத அழுத்தமான த்ரில்லெர்- திரா.

2. மும்பை போலீஸ் (Mumbai Police): இதுவும் திரா மாதிரி த்ரில்லெர் (Crime thriller) தான். படத்தின் முதல் 5 நிமிடங்களில் இதுதான் படம் என்று சொல்லி விட்டு, நான்-லினியர் முறையில் திரைக்கதை செல்கிறது. இது 'The Usual Suspects' , "Shutter Island' மாதிரியான திரைக்கதை கொண்ட படம். அதாவது கிளைமாக்ஸ்க்கு முன்னால் தான் அது வரை சொல்லப்பட்ட கதை கப்சா என்று தெரியும். திரா போலவே இதிலும் அழுத்தமான, சீரான திரைக்கதை. ஆனால் திராவை விட ஒரு படி மேல். ஏனெனில், இந்த படத்தின் ஹீரோ ஓர் ஓரினச் சேர்க்கையாளர் (Gay). திரைக்கதையின் முக்கிய திருப்பமே அதுதான். ஆனால் இதை கொச்சைப் படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர். ஓரினச் சேர்க்கையாளர் பாத்திரத்தில் துணிந்து நடித்த ப்ரித்வி ராஜ் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் செம. மொத்தத்தில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

PS: 'பிரியாணி' படத்தை எல்லாம் மனசாட்சி இல்லாமல் 'த்ரில்லெர்' என்று சொல்லுபவர்கள் மேற்சொன்ன இந்த இரண்டு படங்களையும் பார்த்தால் 'த்ரில்லெர்' படம் என்றால் என்ன என்பது புரியும்.