Tuesday, February 25, 2014

நான் இறால் வாங்கினேன்

ஞாயிறு அன்று, இறால் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சே, சரி  இன்னைக்கு சமைச்சு சாப்பிடனும்னு நினச்சேன். வீட்டுக்கு பக்கத்திலயே இருக்கும் மீன் கடையல் சென்று, 'அக்கா, இறால் என்ன விலை?' என்று கேட்டேன். அவர், 'இன்னைக்கு ரொம்ப கம்மி தம்பி! கிலோ 400(!?) தான்' என்றார். 'என்னங்க இது? வழக்கமா 300 தான?' என்று ஏதோ தினம் தினம் இறால் வாங்குபவன் போல் நான் அடித்து விட, அதற்க்கு 'தம்பி, 300 ரூவாக்கு நீ தான் போய் கடல்ல பிடிச்சிட்டு வரணும்' என்று பல்பு கொடுத்தார். நமக்கு பல்பு வாங்குவது புதுசு இல்லையென்றாலும், அருகில் இருந்த 2 பெண்கள் சிரிக்கவும், மனசாட்சி கூண்டில் இருந்த மிருகம் முழித்துக்கொண்டு, 'டேய் அருண்! 400 ரூபாய்க்கு கம்மியா இறால் வாங்கியே ஆகணும்டா!' என்று ஆணையிட்டது. உடனே வேளச்சேரி மீன் மார்க்கெட்டுக்கு ஷேர் ஆட்டோவில் புயலென புறப்பட்டேன். அங்கே கூட்டம் கம்மியா இருந்த கடையில் சென்று, இறால் விலை கேட்டேன். 'சார், 300 ருபீஸ் தான் சார்' என்று சொல்ல, என் மைண்ட் வாய்ஸ் 'சபாஷ்டா அருண். பின்னிட்ட' என்று கூச்சலிட, 'எனக்கு அரை கிலோ' என்று இறாலை அள்ளினேன். 'சார், அது 400 ருபீஸ் சார், 300 ருபீஸ் இறால் இங்க இருக்கு சார்' என சற்று குண்டான மண் புழுவைக் காட்டினான். 'எனக்கு இது தான் வேணும்' என பெரிய சைஸ் இறாலைக் காட், 'அப்ப அரைக் கிலோக்கு 200 கொடுங்க' என்றான் கடைக்காரன். 'என்னப்பா நீ' என சொல்ல வந்து, எங்கே இவன் வலையைக் கொடுத்து கடலில் இறக்கி விட்டுவிடுவானோ என பயந்து, என் மூளை என் மைக்கை off  பண்ணியது. நேரம் 12:20 என்றது என் டைமக்ஸ் வாட்ச். சரி ஆகிறது ஆகட்டும் என Rs.200க்கு அரை கிலோ வாங்கினேன். அதோடு என் தேடல் முடியவில்லை. இறால் தோலை உரிக்க 20, ரொம்ப நேரம் ஆனதால் நான் அருந்திய கரும்பு ஜூஸ் 20, இளநீர் 40, திரும்ப வரும்போது ஷேர் ஆட்டோவும் பஸ்ஸும் இல்லாமல் ஆட்டோ சார்ஜ் 50 என என் கணக்கிலே வராமல் 130 ரூபாய் பணால். ஆட்டோவில் போகும்பது, மொத்த செலவு 330 என்றது என் கணிதம். வீட்டிற்கு போகையில் பக்கத்து கடைக்கார அக்கா, 'என்ன தம்பி? இறால் வாங்கினீங்களா?' என்று கேட்க பதில் பேச என்னிடம் வார்த்தையில்லை என்று இத்தோடு எஸ்கேப் ஆகிக் கொள்கிறேன்.

2 comments:

  1. கல கலன்னு கலக்கலா எழுதுறீங்க ஜி ...!

    followers list இல்லைன்னா மெயில் subscribe வைங்க ...

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஜீவன் சுப்பு. எப்படி followers list இல்லை மெயில் subscribe வைப்பது? நான் இது வரை செய்ததில்லை. கொஞ்சம் விளக்கினால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete