Tuesday, February 25, 2014

திரா (Thira) மற்றும் மும்பை போலீஸ் (Mumbai Police)

சென்ற வார இறுதியில் இரு அட்டகாசமான படங்கள் பார்த்தேன். அவற்றைப் பற்றி.

1. திரா (Thira): இந்த படத்தைப் பற்றி  ஒரு பதிவரின் தளத்தில் நல்ல விதமாகப் படித்ததால் பார்த்தேன். மிகவும் இறுக்கமான த்ரில்லெர். இளம் பெண்களையும்,  குழந்தைகளையும் கடத்தி விபசாரத்தில் தள்ளும் (Human trafficking) ஒரு மோசமான கும்பலிடம் இருந்து அவர்கள் கடத்திய பெண்களை ஷோபனா மற்றும் தயன் இருவரும் எப்படி மீட்கிறார்கள் என்பதே மையக்கரு. சுஜாதா சொன்னது போல் படம் எடுத்த உடனே கதையை பளிச்சென சொல்லி விட்டு, இறுதிவரை கோர்வையான திரைக்கதையால் பின்னி எடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டு சாதாரண நபர்கள், பெரும் பணபலம் + அடியாள் பலம் பொருந்திய கும்பலை ஜஸ்ட் லைக் தட் என சமாளிப்பது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும் ஷோபனாவின் தேர்ந்த நடிப்பு மற்றும் மின்னல் வேக சீரான திரைக்கதையின் முன் அவை தெரியவில்லை. தெவையற்ற காமெடி, பாடல்கள் மற்றும் ஆபாசம் எதுவும் இல்லாத அழுத்தமான த்ரில்லெர்- திரா.

2. மும்பை போலீஸ் (Mumbai Police): இதுவும் திரா மாதிரி த்ரில்லெர் (Crime thriller) தான். படத்தின் முதல் 5 நிமிடங்களில் இதுதான் படம் என்று சொல்லி விட்டு, நான்-லினியர் முறையில் திரைக்கதை செல்கிறது. இது 'The Usual Suspects' , "Shutter Island' மாதிரியான திரைக்கதை கொண்ட படம். அதாவது கிளைமாக்ஸ்க்கு முன்னால் தான் அது வரை சொல்லப்பட்ட கதை கப்சா என்று தெரியும். திரா போலவே இதிலும் அழுத்தமான, சீரான திரைக்கதை. ஆனால் திராவை விட ஒரு படி மேல். ஏனெனில், இந்த படத்தின் ஹீரோ ஓர் ஓரினச் சேர்க்கையாளர் (Gay). திரைக்கதையின் முக்கிய திருப்பமே அதுதான். ஆனால் இதை கொச்சைப் படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர். ஓரினச் சேர்க்கையாளர் பாத்திரத்தில் துணிந்து நடித்த ப்ரித்வி ராஜ் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் செம. மொத்தத்தில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

PS: 'பிரியாணி' படத்தை எல்லாம் மனசாட்சி இல்லாமல் 'த்ரில்லெர்' என்று சொல்லுபவர்கள் மேற்சொன்ன இந்த இரண்டு படங்களையும் பார்த்தால் 'த்ரில்லெர்' படம் என்றால் என்ன என்பது புரியும்.

No comments:

Post a Comment