Saturday, March 7, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)

மறக்க முடியாத கேரம் போர்ட் (Part-2)
===================================
7வது 8வது பீரியட்களில் மனது ஒட்டவில்லை. சும்மாவே கவனிக்க மாட்டோம். இதில் HOD சொன்னது மனதில் ரீங்காரமிட, இதை எப்படி சமாளிப்பது என்பதிலேயே மனம் சுற்றியது. காலேஜை முடித்து, ஹாஸ்டல்க்கு வந்து, யாருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. அன்றைய இரவு, எங்கள் மெஸ்ஸில் உருப்படியாக போடப்படும் சப்பாத்தி. நான், ஐயர் எல்லாம் போட்டி போட்டு 10 சப்பாத்தி சாப்பிடுவோம். இந்த பிரச்சினையால் அன்று சரியாக சாப்பிடவில்லை என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. அன்றும் வயிறு முட்ட 10 சப்பாத்தி சாப்பிட்டேன்!!!

சாப்பிட்டு வந்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க செவ்வக மேஜை மாநாடு ஆரம்பித்தது (எங்கள் ரூமில் வட்ட மேஜை கிடையாது!). யோசனைகள், வியூகங்கள், திட்டங்கள் பலவும் வந்தன. சம்பந்தம் இல்லாமல் வெங்கி சிரித்தான். என்னவென்று கேட்டால்,
"இல்ல, நம்மெல்லாம் ஹாஸ்டல்ல இருக்கோம். என்னமாவது சொல்லி சமாளிக்கலாம். டே ஸ்காலர் பாஸ்கர், பாலா-இவனுங்க வீட்டில் சொல்வானுங்கனு நெனச்சேன்."

வெங்கி சொன்னது சிறப்பான இருண்மை நகைச்சுவை(black comedy) என்றாலும், அதை ரசிக்கும் நிலையில் அங்கே யாருமில்லை. சற்று என்னைப் பற்றி யோசித்தேன். நான் படிப்பது, ஹாஸ்டல், மெஸ்-அனைத்தும் கடன். மிக சிரமத்தில்தான் நான் படித்து வந்தேன். இப்போது போய், கேரம் போர்ட் விளையாடி டெஸ்ட்க்கு மட்டம் அடித்ததால், காலேஜில் கூப்பிட்டார்கள் என சொன்னால் செருப்படி விழும். காலேஜ்க்கு வருவது கூட அவர்களுக்குப் பிரச்சினையில்லை. நம் கஷ்டப்பட்டு பணம் அனுப்பினால் இவன் இங்கே திமிரெடுத்து சேட்டை செய்கிறானே என்ற கோபம்தான் அதிகம் வரும். நிச்சயம் அதை சாந்தப் படுத்த முடியாது. கிட்டத்தட்ட அனைவரின் நிலையும் அதே. எனவே பெற்றோரை அழைத்து வருவது நிச்சயம் முடியாத விஷயம். HOD-ஐ எப்பாடு பட்டாவது சமாளித்தே ஆக வேண்டும். 

எங்கள் செவ்வக மேஜை மாநாடு தோல்வியில் முடிந்தது. உருப்படியாக யோசனை ஒன்றும் வரவில்லை. ஆனது ஆகட்டும் என தூங்கி விட்டோம். மறுநாள், வேறு வழியே இல்லை. HOD-யை போய் பார்ப்பது என முடிவு செய்யப் பட்டது. ஆனால் HOD அன்று லீவ். பாலசுப்ரமணியம் ஒரு ஐடியா சொன்னான்.
"மாமா (என்னைத்தான்), நம்ம போய் HOD-ஐ வீட்டில் பார்த்தா என்ன?"
நாங்கள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தோம். வீட்டில் எப்படியும் நல்ல மூடில் இருப்பார். நாம் போய் பார்த்து மன்னிப்பு கேட்டால், மனமிறங்கி வர சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதாகச் சொன்னான். சரியோ, தவறோ முயன்று பார்க்கலாம் என்று HODஐ பார்க்க சித்தோடு கிளம்பினோம். திரும்பவும் அதிர்ஷ்ட தேவதை அருகில் வருவது போல் தெரிந்தது. ஆனால், விதி HOD-ன் மகள் வடிவத்தில் அங்கே காத்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)


No comments:

Post a Comment