Sunday, March 8, 2015

மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)

மறக்க முடியாத கேரம் போர்ட் (நிறைவுப் பகுதி)
============================================
எங்களை ஏன் விதி இப்படி சுற்றி சுற்றி அடிக்கிறது? எங்களை விட வெங்கி மிகவும் மோசமான நிலையில் இருந்தான். நடப்பதை இப்போது சொன்னாலும் பிரச்சினை: செருப்படி விழும். சொல்ல விட்டாலும் பிரச்சினை: ஒருவேளை அப்பாவைக் கூட்டி வருவதுதான் இறுதியென்றால், இதை அப்பவே சொல்ல என்னடா என்று டபுள் செருப்படி விழும். புலம்பிக் கொண்டே இருந்தான்.
"நாளைக்கு எனக்கு சங்கு நிச்சயம்டா"
அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் மட்டும் யோக்கியமா? அதே செருப்படி எங்களுக்கும் நிச்சயம்!

வெங்கியின் அப்பா ஹாஸ்டல்க்கு வந்த போது காலை 7 மணி. எங்களைப் பார்த்து, "எப்படிப்பா இருக்கீங்க?"
"நநல்ல்ல்லாலாலா இருக்கோம்ப்பா"
"ஏன் டல்லா இருக்கீங்க?"
"வந்து, வந்து,டெஸ்ட்க்கு நைட் முழிச்சு படிச்சோம்"
"பரவயில்லையே? மன்த்லி டெஸ்ட்கே இந்த ப்ரிபிரேஷனா? குட்"
எங்கள் மனசாட்சி கெக்காளமிட்டு சிரித்தது.

இதற்க்கு மேல் முடியாது, உண்மையை சொல்லி விடுவது என்று முடிவு செய்து, வெங்கி அப்ரூவர் ஆனான். அப்போதே வெங்கி சுக்கு நூறாய் கிழிக்கப்பட்டான். நாங்கள் கொஞ்சமாய் கிழிக்கப்பட்டோம்.
HOD-ஐப் பார்க்க வெங்கியும், அப்பாவும் காத்துக் கொண்டிருந்தார்கள். முதல் & இரண்டாவது இயர் மாணவர்களிடையே ஏதோ ராகிங் பிரச்சினை ஏற்பட்டு, HOD கடும் கோபத்தில் இருப்பதாகத் தகவல் பரவியது. அய்யோ, இது வேறயா? இருந்த 1% நம்பிக்கையும் போயிற்று. ஹாஸ்டல் பிரச்சினையை அடுத்து, என் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. 
வெங்கியும், அப்பாவும் HOD அறைக்குள் சென்றனர். நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தோம். உண்மையில் செமெஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட இவ்வளவு பதட்டம் அடைந்ததில்லை. கால் மணி நேரம் கழித்து வந்தார்கள். ஆச்சர்யம், வெங்கி முகத்தில் சிறு பிரகாசம். எங்களுக்குப் புரியவில்லை. அப்பா எங்களை அழைத்தார்.
"இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்கப்பா. வரேன்"
அதிர்ச்சி+குழப்பம்+சந்தோஷம். "என்னாச்சுடா?", நாங்கள் பதற, வெங்கியின் ஃப்ளாஷ்பேக் இங்கே ஆரம்பிக்கிறது. சர்ர்ர்ர்ர்ர்ர்ர். HOD அறை.
"குட் மார்னிங் சார். நான் வெங்கடேசன் ஃபாதர்"
"குட் மார்னிங். உங்க பையன் பண்ணதப் பாத்தீங்களா?"
"கேள்விப் பட்டேன் சார்"
"இவங்களுக்குக் கஷ்டப்பட்டு பாடம் நடத்தி, அதில டெஸ்ட் வச்சா ஸ்கிப் பண்றாங்க. HOD டெஸ்ட்க்கே இந்த மரியாதை"
"சார் என்னது, உங்க டெஸ்ட்க்கு மட்டம் போட்டங்களா? எவ்ளோ திமிர்? இவன சும்மா விடக் கூடாது சார்". அடிக்கக் கை ஓங்குகிறார்.
"சார் ப்ளீஸ் வேணாம்"
"இல்ல சார், இவனுக்கு ரொம்ப கொழுப்பு ஏறிடுச்சு. இல்லன்ன HOD உங்க டெஸ்ட்ட ஸ்கிப் பண்ணுவானா? இவன வெட்டிப் போட்டாக் கூடா தப்பில்ல"
"சார் ப்ளீஸ். இந்த ஒரு வாட்டி வி ஃபர்கிவ் தெம்"
"நீங்க சொல்றீங்கனு விட்றேன் சார். இல்லன்னா இவன!!!"
"நான் பாத்துகிறேன் சார். யு கூல் டவ்ன்"
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஃப்ளாஷ்பேக் முடிந்தது.
எங்களுக்கு சந்தோசத்தில் என்ன பண்ணுவதேன்றே புரியவில்லை. HOD அழைத்தார்.
"பாத்தீங்களா? உங்களால பேரன்ட்ஸ்க்கு எவ்ளோ கஷ்டம்"

மவுனம்.
"ஆல்ரைட். திஸ் இஸ் தி லாஸ்ட் டைம். நீங்க காலேஜ் டே, ஹாஸ்டல் டே என்ஜாய் பண்ற இந்த த்ரீ டெஸ்ல உங்கள இவ்ளோ படுத்தினதே போதும்னு நினைக்கிறேன். நீங்க என்ன  பண்றீங்கன்னா, TV டெஸ்ட் பேப்பர் எல்லா கொஸ்டின்க்கும் ஆன்ஸர் எழுதி சப்மிட் பண்ணிட்டு, ரெகார்ட்ல சைன் வாங்கிக்கிங்க"
"சார், தேங்க் யு வெரி மச் சார்"
"அத வெங்கடேசன் ஃபாதர்க்கு சொல்லுங்க. யு கேன் லீவ் நவ்".
இவ்வளவு எளிதில் இந்த சிக்கலில் இருந்து மீள்வோமென நினைக்கவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. தூக்கு தண்டனைக் கைதிக்கு திடீரென்று ஜனாதிபதியின் கருணை மனுவின் மூலம் விடுதலை கிடைத்தது போல் இருந்தது. பாரதிராஜா படம் போல், ஒன்றல்ல நிறைய அதிர்ஷ்ட தேவதைகள் என்னைச் சுற்றி ஆடுவது போல் இருந்தது. அப்புறமென்ன, சுகி சிவத்தின் பேச்சைக் கேட்க திறந்த வெளி அரங்கிற்குப் பறந்தோம். 
(முடிந்தது)

பின்னுரை: இப்போது அந்த கேரம் போர்ட் யாரிடம், எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படியே இருந்தால் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகள்:
1. TV டெஸ்ட் அன்று கேரம் போர்ட் விளையாட வேண்டாம்.
2. மாட்டிக் கொண்டால், தயவு செய்து HOD மகளிடம் பேச வேண்டாம்.















No comments:

Post a Comment