Saturday, February 6, 2016

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

P.H.டேனியல் எழுதி, இரா.முருகவேள் மொழி பெயர்த்த 'எரியும் பனிக்காடு' (Red Tea) புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அதன் மீதான பார்வை இங்கே. பாலா இயக்கிய 'பரதேசி' படத்தின் மூலக்கதை இப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்கு முன்னால், இந்தியாவில் புரையோடிப் போயிருந்த சாதிய பாகுபாடுகள், ஆங்கிலேயர்களால் கொஞ்சம் மாற்றப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். இந்து மதத்தின் சாதிய அமைப்பால், விவசாய மற்றும் பண்ணைக் கூலிகளாக இருந்த ஏழை தலித் மக்கள், வெள்ளையர்களின் சுய லாபத்திற்காகவும், பண வெறிக்காகவும் எப்படி பலிகாடா ஆனார்கள் என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்கிறது இந்த புத்தகம். நம் நாட்டைச் சேர்ந்த சில ஈனப் பிறவிகளும், தங்கள் நலனுக்காக, வெள்ளையர்களின் கால்களைக் கழுவிப் பிழைத்துக் கொண்டு, தன சொந்த இன மக்களியே பலி கொடுத்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ளது.

விவசாயம் பொய்த்ததால், சொந்த ஊரில் பிழைக்க வழியற்று, கங்காணியின் ஆசை வார்த்தையில் மயங்கி, தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகும் கருப்பன்-வள்ளி தம்பதிகளின் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை. அங்கே நடக்கும் சுரண்டல்கள், கொடுமைகள், பாலியல் வன்முறைகள், கற்பனைக்கும் எட்டாத கொடூரங்கள் அவர்களின் மூலமாக சொல்லப் படுகிறது. ஒரு வருட ஒப்பந்தத்தில் வரும் கருப்பன்-வள்ளி தம்பதி, கங்கானியால் ஏமாற்ற்றப்பட்டு, மூன்று வருடம் தங்க நேர்ந்து, வள்ளியின் மரணத்தில் முடிகிறது புத்தகம். வள்ளியின் மரணத்தில், அழுவது கருப்பன் மட்டுமல்ல, நாமும்தான்.

புத்தகம் படித்த மறுநாள், அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது, ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். அது கருப்பன்-வள்ளியின் கண்ணீரும், ரத்தமுமாக தெரிந்தது. முதலாளித்துவத்தின் பணவெறிக்கு பலியான அத்தனை தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீரும், ரத்தமும் நாம் அருந்தும் ஒவ்வொரு தேநீர் துளியிலும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத, கசப்பான உண்மை...









1 comment: