Saturday, February 6, 2016

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

கருப்பன்-வள்ளி மாதிரியான ஆயிரக்கணக்கான தலித் தொழிலாளர்கள், வெள்ளையர்கள் & சில இந்திய ஈனப் பிறவிகளால் வதைக்கப்பட்டதே எரியும் பனிக்காடு புத்தகம். ஆனால் இன்றுவரை தலித் மட்டுமன்றி, அனைத்து ஏழைத் தொழிலாளர்களும் காலம் காலமாக கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம், அப்போது வெள்ளையன் + சில துரோகிகள். இப்போது முழுக்க முழுக்க பேராசை பிடித்த (இந்திய) பண முதலைகள்.

ஷாப்பிங் மால்களில் ஒரு கப் காபி நூறு ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான், நூறுக்கும் குறைவாக ஒரு நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்து இங்கே கட்டுமான வேலைக்கு வரும் அப்பாவி தொழிலாளர்களுக்கும், கருப்பன்-வள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே, ஆனைமலை எஸ்டேட் என்றால், இங்கே சிங்கார சென்னை. இங்கே அவர்கள் செத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது.

எல்லாத் தொழிலாளர்களும் சுரண்டப்படுகிறார்கள் என்றாலும், அதிக பாதிப்புக்கு உள்ளாவது- உள்ளாகியிருப்பது தலித் மக்களே. அரசு அதிகாரமும், உயர் ஜாதி வர்க்கமும், அவர்களை ஒரு எல்லைக்கு மேல் வளரவோ, சிந்திக்கவோ விடாமல், தன்னை சார்ந்து இருக்கும் படியாகவே வைத்துக் கொள்ள விரும்புகிறது. இதற்க்கு ஒரு நல்ல உதராணம்- என்னுடன் 10-வது வரை ஒன்றாகப் படித்த தலித் நண்பன், எங்கள் ஊரில் சாணி தட்டிக் கொண்டு இருக்கிறான். அதுவொன்றும் இழி தொழில் இல்லை என்றாலும், மூன்று தலை முறையாக அவன் குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்கே தவறு? யாரைப் பழி சொல்வது? என்ன தீர்வு?

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, சில அறிவுஜீவிகள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால்தான் இந்தியா உருப்படும் என்று ஜல்லியடிப்பது என்ன மாதிரியான நியாயம் என்று புரியவில்லை. இட ஒதுக்கீட்டை தவறாக உபயோகிப்பதும், அது சரியான நபர்களுக்கு போய் சேரவில்லை என்பதுமே அதில் இருக்கும் தலையாய பிரச்சினைகள். அதை சரி செய்ய வக்கில்லாமல், மனித மலத்தை சுமந்து கொண்டும், கழிவு அடைப்பை சரி செய்ய குழியில் இறங்கி உயிரை மாய்க்கும் பல தலித் மக்களின் ஒரே ஆயுதமான இட ஒதுக்கீட்டையும் அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நீதி?

என்றைக்கு கழிவு அடைப்பை சரி செய்ய பள்ளத்தில் இறங்குபவன் ஒரு தலித் இல்லையோ, அன்றைக்கு ரத்து செய்து கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை. 









No comments:

Post a Comment