Tuesday, February 9, 2016

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

எட்டாவது செமஸ்டர். ப்ராஜெக்ட் எனப்படும் முக்கியமான வஸ்து வரும் செமஸ்டர். ஆரம்பத்தில் நாமாக எதாவது ப்ராஜெக்ட் செய்து சாதிக்க வேண்டும் என்ற பெரிதாக கனவு இருந்தது. பின்னாளில் ஆசைகள் சுருக்கப்பட்டு, போகப் போக நாமாக செய்வது கடினம் என்பது விளங்கி, நான்காம் ஆண்டில் நாமாக செய்யவே முடியாது என்பது புரிந்தது. கோயம்புத்தூரில் சல்லிசான விலைக்கு ப்ராஜெக்ட் விற்கிறார்கள் என்று தெரிந்து, அவனவன் கோயம்புத்தூருக்கும், ஈரோடுக்கும் அடிக்கடி போய் வர நேர்ந்தது.

 எட்டாவது செமஸ்டரின் ஆரம்பத்திலேயே ப்ராஜெக்ட்க்கு ஆள் சேர்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. சில பேர் தேவர் மெஸ்ஸில் பரோட்டா, ஆம்லெட் வாங்கிக் கொடுத்து குரூப் சேர்க்கிறார்கள் என்ற வதந்தி வேறு பரவியது. சரி, நமக்குன்னு ஒருத்தன் இனிமேல பொறக்கப் போகிறான்(?) என்று நினைத்துக் கொண்டு பெரிதாக மெனக்கெடவில்லை. இறுதியாக நான், பரணி, விஜயவேல், மணிவண்ணன் என நான்கு பேராக ப்ராஜெக்ட் குரூப் ஆரம்பிக்கப் பட்டது. க்ரூப்பின் முதல் தீர்மானமாக, நான் ஏற்கனவே கேம்பஸ் இன்டெர்வியுவில் செலக்ட் ஆனதால், ப்ராஜெக்ட்டின் முழு வேலையும் நான் மட்டும் பார்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. ப்ராஜெக்ட் குரூப் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப்ராஜெக்ட் சென்ட்டர் பிடிப்பது அடுத்த வேலை. கோயம்புத்தூரில் ஹோப் காலேஜ் என்னுமிடத்தில் நிறைய ப்ராஜெக்ட் சென்ட்டர்கள் இருப்பது கேள்விப்பட்டு அங்கே போனோம். அங்கே நிறைய இல்லை, திரும்பிய பக்கமெல்லாம், புற்றீசல் போல சென்ட்டர்கள் இருந்தன. எங்கே செல்வது என்று குழம்பி, ஒரு வழியாக ACET என்னும் சென்ட்டரை அணுகி, 10,000 ரூபாய்க்கு பேரம் முடிக்கப்பட்டது. அங்கே சேர்ந்ததற்கு இரண்டு காரணங்கள். 1. அந்த சென்ட்டரில் அமெரிக்க கம்பனியுடன் கொலாப்ரேஷன் இருப்பதாக ஒரு போட்டோவை காட்டினான். அதில் சென்ட்டர் ஓனருடன் ஒரு வெள்ளையன் இருந்தான். 2. அந்த சென்ட்டர் பால்கனியில் இருந்து பார்த்தால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் கல்லூரி பெண்கள் தெளிவாகத் தெரிந்தனர்!!!

எங்களுடன் பாலமுருகன் மற்றும் கிருபாகரன்  க்ரூப்பும் அங்கே ப்ரோஜெக்ட்டை வாங்கினார்கள். நாங்கள் எல்லோரும், சென்ட்டர்க்கு பக்கத்திலேயே ஒரு PG ஹாஸ்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். இரண்டு நாட்கள் கழித்து ப்ராஜெக்ட் கிளாஸ் தொடங்கும் என்றும், இரண்டு வாரங்கள் நடக்கும் என்றும் ஓனர் சொன்னான். இரு நாட்கள் கழித்து சரித்திர புகழ் பெற்ற வகுப்புகள் தொடங்கின. அப்போது தெரியாது நாங்கள் மொத்தமாக ஏமாற்ற்றப் படப்போகிறோம் என்று..

(தொடரும்)





















No comments:

Post a Comment