Sunday, April 17, 2016

வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்

வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்

தமிழகமும் இந்தியாவைப் போல் பன்முகத் தன்மை கொண்டது. ஆதித்(?) தமிழர் அல்லாது தெலுங்கர், கன்னடர், ஜெயின் மற்றும் இன்னும் பிற குறு சமூகங்கள் அடங்கியதுதான் தமிழகம். பூர்வீகம் தமிழகம் இல்லையென்றாலும், பல தலைமுறைகளாக இங்கேயே வாழ்வதால், ஒரு சில பாரம்பரிய முறைகளைத் தவிர்த்து, தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றெனக் கலந்தவர்கள். சித்திரை-1 தான் இவர்களுக்கு புத்தாண்டு. பொங்கல் தான் உண்மையான பண்டிகை. சித்திரையில் அம்மன் திருவிழா. என்றுமே நாம் தமிழர்கள் இல்லை என்ற எண்ணம் தலை தூக்கியதே இல்லை.

ஆனால், சமீப காலமாக தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும்; இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என பிரித்தாளும் சூழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்பது வரவேற்கத் தக்க விஷயம்தான். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த சிறுபான்மையினர் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்?  இப்போதே வந்தேறிகள் என்று சீண்டுகிறார்கள். நாளை தமிழருக்கு மட்டும்தான் அரசு வேலை, தமிழர் மட்டும் தான் இங்கே கடை வைக்க வேண்டும், தமிழர் மட்டும் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கிளம்பினால்? தமிழன் தான் உயர்ந்த ஜாதி, வந்தேறிகள் எல்லாம் கீழ் ஜாதி என ஆரம்பித்தால்?ஒட்டு மொத்த சிறுபான்மையினர் இனமே தமிழகத்தில் வாழ முடியாத சூழல் ஏற்படலாம். ஜெர்மானியர்கள் தான் உயர்ந்த ரத்தம், யூதர்கள் அசுத்த ரத்தம் என்று ஆரம்பித்த ஹிட்லர், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜெர்மனியை எந்த நிலைக்கு ஆளாக்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் என்றால், ஏறக்குறைய தமிழகத்திற்கு சீமான். இவரிடம் சில கேள்விகள்.

1. வந்தேறிகள் என்று சொல்லப்படும் பிற சமூகத்தின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் துணிவு உண்டா?
2. உங்களின் கொள்கைப்படி, ஆதித் தமிழர் அல்லாதவர்கள் வந்தேறிகள். அப்படிப் பார்த்தால், இந்து மதம் தவிர்த்த, கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சமணர்கள் இவர்கள் எல்லேருமே வந்தேறிகள்தான். இவர்கள் யாரும் எங்களுக்கு ஓட்டு போடத் தேவையில்லை என்று சொல்ல முடியுமா?
3. தெளுங்கனான திருமலை நாயக்கர் கட்டிய திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும் என சொன்னீர்கள். வெள்ளையர்களிடமும்தான் நாம் அடிமைப் பட்டோம். அதற்காக அவர்கள் தொடங்கிய இந்தியன் ரயில்வேயை ரத்து செய்ய முடியுமா??

பின் குறிப்பு: சீமானின் கூற்றுப்படி நானும் வந்தேறிதான். சுமாரு 12-13 தலைமுறைக்கு முன்னால், எங்கள் முன்னோர்கள் ஆந்திராவின் ஏலூர் என்ற ஊரிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்ததாக என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்றுமே நாங்கள் தெலுங்கர் என்று நினைத்ததில்லை. நாங்கள் மட்டுமல்ல. வந்தேறிகள் எல்லோருமே!!! 




No comments:

Post a Comment