Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஒரு இனத்தை முற்றிலும் வேரறுக்க இரு வழிகள் உண்டு. 1. இன மக்களை முற்றிலும் அழிப்பது, 2. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பது. ஹிட்லர், யூத இன மக்களை அழிக்க முயன்றது முதல் வழி. ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களின் பெண்களை வெள்ளையர்கள் திருமணம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் இனத்தை அழிக்கச் செய்தது இரண்டாம் வழி. அதேபோல், காளைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்ற பொட்டைக் காரணத்தைக் காட்டி, ஜல்லிக்கட்டு என்ற தமிழனின் பூர்வ அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிகள் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ, இந்த பிரச்சினையை தங்கள் ஓட்டு வங்கிக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில்தான் முனைப்புடன் இருக்கின்றன என்பது அதனினும் வெட்கக்கேடு.

ஜல்லிக்கட்டை தடை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இந்த மிருக நல ஆர்வலர்களின் முக்கிய நோக்கம் நம் காளைகளின் மீதுள்ள அன்பா? பரிவா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த வழக்கின் சில நாள் செலவே 2 கோடி ரூபாய் என்றால், இதில் பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை இருந்தால், இந்தியாவில் மட்டும் அழியும் நிலையில் எண்ணற்ற விலங்குகள் இருக்கின்றன. முதலில் அவைகளைக் காப்பாற்றுங்கள். அப்புறம் ஜல்லிக்கட்டுக்கு வரலாம்.

எங்கள் ஊரில், ஒரு விவசாயியின் காளை இறந்து விட்டது. அவரும், அவர் மனைவியும்,தன் சொந்த மகன் இறந்தது போல, அழுது புரண்டு, இறுதி ஊர்வலம் நடத்தி அந்த காளையை அடக்கம் செய்தனர். இதுவே, எங்கள் மக்களுக்கும், காளைகளுக்கும் உள்ள பந்தம். AC அறையில் உட்கார்ந்து கணிணியைத் தட்டிக் கொண்டு, தின்ற பீட்சா, பர்கர் செரிக்காமல் கோலா-பெப்சி அருந்தும் நீங்கள், காளைகளை எப்படிக் கையாள வேண்டுமென்று எம் மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை.


No comments:

Post a Comment