Saturday, December 19, 2015

பீப் சாங் மட்டும் தான் ஆபாசத்தை வளர்க்கிறதா?

பீப் சாங் மட்டும் தான் ஆபாசத்தை வளர்க்கிறதா?

சற்று நாட்களாக மீடியாவில் காணமல் போயிருந்த மாதர் சங்கங்கள் பலவும், சிம்பு-அனிருத் பாடிய "பீப்" பாடல் மூலம் மீண்டும் முகம் காட்டி இருக்கிறார்கள். "பீப்" பாடல் தவிர தமிழ் கூறும் நம் சினிமா பாடல்கள் யாவும் தேவாரம்-திருவாசகம்-திருப்புகழ் மாதிரி இவர்களுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் தான் பீப் பாடலைத் தடை செய்வது மூலம், சமூகம் முழுவதும் திருந்தி விடும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடல் தவிர்த்து நம் தமிழ் சினிமா இதுவரை செய்தது என்ன? சற்று விரிவாகப் பார்ப்போம்.

திருடா திருடி படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 'மன்மத ராசா' என்ற ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்த பாடலைக் கொடுத்து புகழ் பெற்ற படம். இந்த படத்தை ஒரு நாள் திருவிழா சமையம், பாட்டி ஊரில் குடும்பத்துடன் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. இடைவேளைக்குப் பிறகு, 5 நிமிடத்திற்கு ஒருமுறை சேனல் மாற்ற வேண்டிய சூழல். அவ்வளவு ஆபாசம். சரி வேறு படம் பார்க்கலாம் என்றால், வாண்டுகள் இந்த படம்தான் பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்தனர் (மன்மத ராசா பாட்டிற்காக). ஒரு வழியாக பார்த்து தொலைத்தோம்.

என் கேள்வி இது தான். அந்த படம் பீப் பாடல் அளவில் பாதி கண்டனங்களையாவது பெற்றதா? மேற்சொன்ன படம் ஒரு பதம் தான். அதைவிட ஆபாசமான பாடல்களும், காட்சிகளும் தமிழ் சினிமாவில் அளவில்லாமல் குவிந்து கிடக்கின்றன. ஆனால், ஒரு சில பாடல்களோ, காட்சிகளோ சர்ச்சையில் சிக்குவது தான் நகைமுரண்.

'உரலு ஒன்னு அங்கிருக்கு, உலக்கை ஒன்னு இங்கிருக்கு' பாடல் எதைக் குறிக்கிறது? 'நாட்டுச்சரக்கு நச்சுனுதான் இருக்கு' பாடலில் சரக்கு யார்? 'மைனர் கு** சுட்டுட்டேன்' வசனம் சொல்வது என்ன? 'This is my fu**ing game'-ல் fu**ing-க்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? அப்போதெல்லாம் எங்கே போயின மாதர் சங்கங்கள்?  எழுத்தாளர் சுஜாதா சொல்வார், 'பிரபலங்களைத் திட்டுவது' பற்றி. சடாரென மீடியா வெளிச்சம் பெற, குறுக்கு வழிதான் இந்த பிரபலங்களைத் திட்டுவது. அதைத்தான் சங்கங்கள் செய்து கொண்டிருகின்றன.

சினிமாவை விட்டு நிஜத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் தினமும் எத்தனையோ பாலியல் அத்துமீறல்களும், மோசடிகளும் நடந்த வண்ணம் உள்ளன. அதற்கு இந்த மாதர் சங்கங்களின் எதிர்வினை என்ன? சமீபத்தில் ஒரு சிறுமியை அவளின் அண்ணன், தாத்தா உட்பட பலர் சீரழித்த பிரச்சினையில், சங்கங்கள் என்னென்ன போரட்டங்களில் ஈடுபட்டன?

நிஜத்தில் ஆற்ற வேண்டிய களப்பணி எவ்வளவோ இருக்க, தம்படிக்குத் தேறாத பீப் பாடலில் தம் நேரத்தை வீனடிப்பதைத்தான் மாதர் சங்கங்கள் விரும்புகின்றனவா?






No comments:

Post a Comment