Friday, April 4, 2014

மான் கராத்தே

நம் தமிழ் ஹீரோக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. இரண்டு படங்கள் ஹிட்டடித்தால் போதும். உடனே அடுத்த படத்தில் மாஸ் காட்ட நினைப்பார்கள். ஓப்பனிங் சாங், பஞ்ச் வசனம், குத்துப் பாடல், செண்டிமெண்ட் இவையெல்லாம் கண்டிப்பாய் வேண்டும் என கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன். ok, படம் எப்படி? லெட்ஸ் சீ!

ஒரு சில அறிமுக இயக்குனர்கள், அருமையான திரைக்கதையுடன் சில நல்ல முயற்சிகள் எடுத்து நம் சினிமாவை அடுத்த நிலைக்கு சில படிகள் மேலே கொண்டு சென்றால், சில பேர் இந்த மாதிரி குப்பை மசாலாக்களை எடுத்து பத்து படிகள் கீழிறக்கி விடுகின்றனர். அதிலும் 'மான் கராத்தே' பார்க்க முடியாத மொக்கையான குப்பை. நான் சமீபத்தில் பார்த்த 'புலிவால்' படத்தை விட மோசமான, படு அபத்தத் திரைக்கதையை இந்த படத்தில்தான் பார்த்தேன். இதில் கிக் பாக்ஸிங் பற்றி ஏதோ சொல்கிறேன் பேர்வழி என்று அந்த விளையாட்டை எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக் கேவலப்படுத்தி நாறடித்து விட்டனர். கிக் பாக்ஸிங் அமைப்புகள் இந்த படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தால் ஆச்சர்யம் இல்லை.

இந்த படத்தின் லட்சனத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளும் பாக்ஸிங் இறுதிப் போட்டியின் முடிவு பற்றியே தினதந்தியில் மூன்று பத்தி செய்திதான் வருகிறது. ஆனால் போட்டியின் லீக், அரை இறுதி மேட்ச்சுகள் பற்றி போட்டோவுடன், தலைப்புச் செய்தியே வருகிறதாம். இந்தியா டுடே, தி வீக் புத்தகங்களும் இதில் அடக்கம். நம்மையெல்லாம் அடிமுட்டாள்களை விட கேவலமாக நினைத்து விட்டார் இயக்குனர்.

படத்தில் வரும் காட்சி ஒன்று: இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஹன்சிகா எனக்குக் கிடைப்பார் என்று சொல்லி கிருஷ்ண வம்சியிடம் சென்று போட்டியில் இருந்து விலகிக் கொள்ள சிவகார்த்திகேயன் கேட்பார். அப்போது கோபமாக வம்சி, "உங்களுக்கெல்லாம் பாக்ஸிங்னா விளையாட்டாப் போச்சுல்ல" என்பார். இந்த கேள்வியை இயக்குனர் தனக்குக்தானே கேட்டுக்கொள்ளவும். ஏனென்றால், பாக்ஸிஙை அவ்வளவு அசிங்கப் படுத்திவிட்டார்.

இறுதியாக, இந்த படமெல்லாம் ஓடவே கூடாது. ஓடினால், நிறைய பேர் இந்த மாதிரி குப்பைகளை (படம்) எடுத்து நம் தலையில் கொட்டுவார்கள். அப்புறம் நம் சினிமாவின் தரம் மேலும் பல படிகள் சறுக்கி விடும். ஓடிவிட்டால்?? சுஜாதா சொல்வது போல் நம்மை பசித்த புலி தின்னட்டும்.


No comments:

Post a Comment