Tuesday, April 22, 2014

தெனாலிராமன்

தெனாலிராமன்
===============

குழந்தைகளுக்காகப் படம் எடுப்பது ஒரு வகை என்றால், குழந்தைத் தனமாகப் படம் எடுப்பது மற்றொரு வகை. இதில் தெனாலிராமன் 90% இரண்டாவது வகையான படம். சிறு வயதில் நாம் படித்த தெனாலிராமன் நீதிக்கதைகளையே நீட்டி முழக்கி திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்த கதைகளின் இடையே, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற மாபெரும் பிரச்சினையைச் சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறார். அதற்கு இயக்குநருக்குப் பாராட்டுக்கள். ஆனால், படம் முழுவதையும் ரசிப்பதற்கு இந்த ஒரு அம்சம் போதாதே டைரக்டர் சார்?

3 வருட 'அம்மா' வனவாசத்திற்குப் பிறகு வடிவேலுவைத் திரையில் பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது. வடிவேலுவின் பெரும் பலமே அவரின் காமெடி ததும்பும் உடல் மொழிதான் (mannerism). வின்னர், தலைநகரம், இங்கிலிஷ்காரன்- இந்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் வசனத்தை விட அவரின் உடல் மொழியே அவருக்குப் பெயரை வாங்கித் தந்தது. ஆனால் இந்த படத்தில் பக்கம், பக்கமாய் வசனமாகப் பேசியே மாள்கிறார் வடிவேலு. நமக்கு தான் சிரிப்பு வரவில்லை. சரி திரைக்கதை? தெனாலிராமன் கதைகளை விடுத்துப் பார்த்தால், வடிவேலுவை வைத்து இதைவிட சீரியஸாக எடுக்க முடியாது என்பதால் இறுதி வரை எது சீரியஸ், எது காமெடி என்று குழம்புகிறது. முன்னமே சொன்னது போல் திரைக்கதை மொத்தமுமே அமெச்சூர் தனமாக இருக்கிறது. தேறுவது தேர்ந்த கலை இயக்கம், துல்லிய ஒளிப்பதிவு மற்றும் இமானின் பின்னணி இசை.

வடிவேலுவே பெரும்பான்மைத் திரைக்கதையை எடுத்துக் கொள்வதால் மற்ற எவரும் நடிப்பில் சோபிக்க வாய்ப்பில்லை. பிரியதர்ஷினிக்கு மட்டும் சற்று நல்ல பாத்திரம். ஹும், ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும், அவர்-ஹீரோயின். படம் முழுக்க தொப்புள் தெரிய வலம் வருவதாலோ என்னமோ, நடிப்பு, முக பாவம், லிப் சின்க் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை. சரி, அது தான் படம் முழுக்க வடிவேல் இருக்கிறாரே?

மொத்தத்தில் படம்? நீங்கள் சுட்டி டிவியில் வரும் டோரா- தி எக்ஸ்ப்லோரர் பார்த்து இருக்கிறீர்களா? நம்மால் 5 நிமிடம் கூடப் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் பயங்கரமாக ரசிப்பார்கள். அதே போல்தான் இந்த படமும். இதை குழந்தைகள் வெகுவாக ரசிக்கக் கூடும். ஆனால் நல்ல சினிமாவை எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். எனவே இது, குழந்தைகளுக்காக, குழந்தைகள் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.

பின் குறிப்பு: மான் கராத்தேவிற்கு 'தெனாலிராமன்' பல மடங்கு தேவலாம்.


No comments:

Post a Comment