Wednesday, January 13, 2016

ஸ்டிக்கர்களின் காலம்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இத்தனை TMC நீரைத் திறந்து விடவேண்டும் என்று பத்து முறைக்கும் மேலாக உச்ச நீதி மன்றம் கூவினாலும், அதை கர்நாடகம் காதில் வாங்காது.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் 1001வது முறையாக சொன்னாலும், அங்கே செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளம் தடுத்து நிறுத்தும்.

உண்மையான சாட்சி நொந்து, வெந்து இறந்து போக, பிறழ் சாட்சியின் அடிப்படையில், சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் போதவில்லை என்று அவர் விடுதலை ஆகலாம்.

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை செலுத்தி, அவளை சிதைத்த மிருகம், 18- வயது ஆகவில்லை என்பதனால் விடுதலை ஆகி, கைசெலவுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறலாம்.

நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் 11-மாடி கட்டிடத்தின் முதலாளி, மறுநாளே ஜாமீனில் வெளிவந்து, இன்று வரை, சொகுசு வாழ்க்கை வாழலாம்.

மேற்கண்ட அற்புதங்கள் எல்லாம் நிகழும் நம் இந்திய தேசத்தில், தன் சொந்த நாட்டைச் சேர்ந்த ஓர் இனத்தின் மக்களின் மரபை, அடையாளத்தை, எங்கிருந்தோ வந்த அந்நிய அமைப்பால் தடை செய்ய முடிகிறது என்றால், ஆச்சர்யம் இல்லை தானே? ஏனென்றால் இது ஸ்டிக்கர்களின் காலம்.

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில், இப்போதே முடிவு எடுக்காவிடில், கீழ்க்கண்ட தடைகளும் பின்னாளில் வரலாம்.

1. அரிசி நிறைய சேர்ப்பதே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று கூறி, இட்லி, தோசை, சாதம் இவற்றிற்குத் தடை- சப்பாத்தி சாப்பிட மட்டுமே அனுமதி

2. வடை, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களில் கொழுப்பு அதிகம் இருப்பதால் தடை- சமோசா, பானி பூரி, பேல் பூரி, பிட்சா, பர்கர்க்கு மட்டுமே அனுமதி

3. வேஷ்டியில் பக்கெட் இல்லை- அதனால் வேஷ்டிக்குத் தடை- பேன்ட் போட மட்டுமே அனுமதி. வேண்டுமென்றால் ஷெர்வானி அணிந்து கொள்ளலாம்.

4. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய கலைகளில் ஆபாசம் நிறைய இருப்பதால் அவைகளுக்குத் தடை- இனிமேல் தாண்டியா மட்டும் ஆட அனுமதி

5. கோயில் திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்றும் நிகழ்ச்சிக்குத் தடை - ஹோலி கொண்டாட மட்டுமே அனுமதி

6. நாட்டுக்கோழி, காடை, வெள்ளாடு- இவைகளின் இறைச்சி உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால் தடை. அரசு அங்கீகாரம் பெற்ற KFC, McDonald சிக்கனுக்கு மட்டும் அனுமதி

7. ரஸ்தாளி, இலக்கி, கற்பூரவல்லி போன்ற நாட்டு வாழைப் பழங்களுக்குத் தடை- மோரிஸ் போன்ற மரபணு மாற்றப்பட்ட பழங்களுக்கு மட்டுமே அனுமதி.

2000 - 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையே தடை செய்ய முடிந்த நம் நாட்டில், மேற்சொன்ன சின்ன விஷயங்களா கடினம்? என்றாவது ஒருநாள், சொந்த மரபு நெறிமுறைகளைத் தொலைத்துவிட்டு, குடிநீர் முதல், மலம் கழுவும் நீர் வரைக்கும் பன்னாட்டு நிருவனங்களிடம் கைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.



ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஒரு இனத்தை முற்றிலும் வேரறுக்க இரு வழிகள் உண்டு. 1. இன மக்களை முற்றிலும் அழிப்பது, 2. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பது. ஹிட்லர், யூத இன மக்களை அழிக்க முயன்றது முதல் வழி. ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களின் பெண்களை வெள்ளையர்கள் திருமணம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் இனத்தை அழிக்கச் செய்தது இரண்டாம் வழி. அதேபோல், காளைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்ற பொட்டைக் காரணத்தைக் காட்டி, ஜல்லிக்கட்டு என்ற தமிழனின் பூர்வ அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிகள் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ, இந்த பிரச்சினையை தங்கள் ஓட்டு வங்கிக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில்தான் முனைப்புடன் இருக்கின்றன என்பது அதனினும் வெட்கக்கேடு.

ஜல்லிக்கட்டை தடை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இந்த மிருக நல ஆர்வலர்களின் முக்கிய நோக்கம் நம் காளைகளின் மீதுள்ள அன்பா? பரிவா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த வழக்கின் சில நாள் செலவே 2 கோடி ரூபாய் என்றால், இதில் பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை இருந்தால், இந்தியாவில் மட்டும் அழியும் நிலையில் எண்ணற்ற விலங்குகள் இருக்கின்றன. முதலில் அவைகளைக் காப்பாற்றுங்கள். அப்புறம் ஜல்லிக்கட்டுக்கு வரலாம்.

எங்கள் ஊரில், ஒரு விவசாயியின் காளை இறந்து விட்டது. அவரும், அவர் மனைவியும்,தன் சொந்த மகன் இறந்தது போல, அழுது புரண்டு, இறுதி ஊர்வலம் நடத்தி அந்த காளையை அடக்கம் செய்தனர். இதுவே, எங்கள் மக்களுக்கும், காளைகளுக்கும் உள்ள பந்தம். AC அறையில் உட்கார்ந்து கணிணியைத் தட்டிக் கொண்டு, தின்ற பீட்சா, பர்கர் செரிக்காமல் கோலா-பெப்சி அருந்தும் நீங்கள், காளைகளை எப்படிக் கையாள வேண்டுமென்று எம் மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை.