Sunday, June 21, 2015

காக்கா முட்டை - விமர்சனம்

காக்கா முட்டை - விமர்சனம்

காக்கா முட்டை படத்தில் ஒரு காட்சி: பெரிய காக்கா முட்டையை பிட்சா கடை மேலாளர் அடிக்கிறார். தியேட்டரில் பயங்கர நிசப்தம். மயான அமைதி. pin-drop-silence என்பார்களே, அது மாதிரி. கதாபாத்திரங்களின் உணர்ச்சி- அது இன்பமோ துன்பமோ, நம்மிடமும் அது பிரதிபலிக்க வேண்டும். அதுவே ஒரு உன்னதத் திரைப்படத்துக்கான அடையாளம். இதற்கு சமீபத்திய உதாரணம் 'காக்கா முட்டை'. அந்த இரண்டு பொடியன்கள் சிரித்தால் நாமும் சிரிக்கிறோம். அவர்கள் அழுதால் நமக்கும் தொண்டை அடைக்கிறது. இந்த உணர்வே காக்கா முட்டை படத்தின் பெரிய பலம்.

எதாவது கருத்து சொல்ல ஆசைப்பட்டு, தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு மொக்கை வாங்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில், பெரிதாக மெனக்கெடாமல் போகிற போக்கில் மிக யதார்த்தமாக கருத்துக்களை வீசி விட்டுச் செல்கிறார் இயக்குனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு, உலகமயமாக்கல், அரசியல் சீர்கேடு, ஊடகங்களின் சுய நலம் என நாம் கவனிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

அந்த இரண்டு பொடியன்கள், அம்மாவாக ஐஸ்வர்யா, அந்த பாட்டி மற்ற பிற நடிகர்கள் யாரும் நடித்த மாதிரி இல்லை. ஏதோ சைதாபேட்டை குப்பத்து ஏரியாவிலேயே இருக்கும் மக்கள் மாதிரி, அப்படியொரு யதார்த்தம். இவையெல்லாம் தாண்டி, என்னை ஈர்த்த பாத்திரம் பிட்சா கடை முதலாளியாக வரும் பாபு ஆண்டனி. அத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், பிரச்சினையை எளிதாகக் கையாண்டு, ஒரே நொடியில் ஒட்டு மொத்த ஊடகங்களிலும் தன்னைப் பற்றி நற்பெயரை ஏற்படுத்தும் ஒரு தேர்ந்த பணக்கார முதலாளியை கண்முன் நிறுத்துகிறார் பாபு ஆண்டனி. நம் தினசரி வாழ்விலும் இது மாதிரி ஏகப்பட்ட பாபு ஆண்டனிகள் இருக்கின்றனர். யோசித்துப் பார்த்தல் புரிய வரும். (சமீபத்திய நல்ல உதாரணம்: நரேந்திர மோடி)

'காக்கா முட்டை' படத்தை திட்டி  எழுதி சில அறிவுஜீவிகள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் உரிமை. ஆனால், இதே மேதாவிகள், டோரன்ட்டில் "Children of Heaven" டவுன்லோட் பண்ணி படம் பார்த்து விட்டு, ஆகா ஓஹோ என புகழ்வதைத் தான் பொறுக்க முடியவில்லை. சுஜாதா சொன்ன மாதிரி, அவர்களை பசித்த புலி தின்னட்டும்.

நீங்கள் ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அழுகிப் போன முட்டை மாதிரியான படங்களைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கலாம். ஆனால் எவ்வளவு பணம் செலவு ஆனாலும், இந்த பொன்முட்டயை தவற விட்டு விடாதீர்கள் நண்பர்களே.









Tuesday, June 2, 2015

எங்கே நடக்கிறது தவறு??

இரண்டு வாரம் அலுவலக வேலை காரணமாக தைவான் நாட்டில், ஷின்ச்சு (Hsinchu) என்ற நகரில் தங்க வேண்டி வந்தது. வார இறுதியில் நண்பர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்கையில், ஒரு விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. நம்மூர் பெட்டிக்கடைகள் போல சிறு சிறு கடைகளில் கூட மது விற்பனை நடைபெறுகிறது. பலதரப்பட்ட வகைகளுடன். பெண்கள் கூட மது வாங்குவது சாதரணமாக .இருந்தது. ஆனால், நாங்கள் இருந்த பதினைந்து நாட்களில்,  பொது இடங்களில் ஒருவரைக் கூட மது போதையில் பார்க்கவில்லை. யாரும் சாலையில் சுய நினைவின்றி விழுந்து கிடைக்கவில்லை. ஆனால், மது அருந்துவதை ஒருவிதத் தவறாக நினைக்கும் நம் தமிழ்த் திருநாட்டில்தான் நிலைமை தலைகீழ். இரவு நேரங்களில், அதிமிகு போதையுடன் தள்ளாடும் 'குடிமகன்களை'  எங்கிலும் மிக சாதாரணமாகக் காண முடியும்.  தைவானிலும் மதுதான் விற்கிறார்கள்; நம்மூரிலும் இதே  மதுதானே விற்கிறார்கள்? எங்கே நடக்கிறது தவறு????