Tuesday, April 22, 2014

சலூன் கடை- அன்றும், இன்றும்  
===============================

அன்று- 2007, IRTT, ஈரோடு

அப்போது எங்களுக்கு 3வது செமஸ்டர். முடி வெட்டப் போனால் மொத்தமாக நான்கு, ஐந்து பேராய்தான் போவோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை காலை சாப்பிட்டு இல்லை சாப்பிடாமல் போவோம். அன்று நான், நண்பர்கள் அய்யர் (அருண்), ரவிந்தர், வெங்கி, விஜயவேல் என ஐந்து பேர் முடி வெட்டக் கிளம்பினோம். நான் 3வதாக முடி வெட்ட உட்கார்ந்தேன்.
மூன்று
நான் "இன்னும் கொஞ்சம் சைடுல கட் பண்ணுங்க".

"தம்பி,இதுக்கு மேல ஷார்ட்டா வெட்டுனா ஒரு மாதிரி இருக்கும்பா"

"எந்த மாதிரியாவும் இருக்காது. அதுக்குத் தக்க சென்டர்ல கட் பண்ணிடுங்க"

"இப்போ ஓகே வா தம்பி?"

"இன்னும் கொஞ்சம் சைடுல"

"டேய் படுத்தாதடா. இப்பவே மணி 12. லஞ்ச்க்குள்ள நம்ம ஹாஸ்டல்க்கு போகணும்" என்றான் வெங்கி.

"சரிடா, கத்தாத"..

நான் சுமாராக ஐந்து முறை இன்னும் கொஞ்சம் சைடுல வெட்டுங்க என்று சொல்லி இருப்பேன்.

இன்று- 2014, மடிப்பாக்கம், சென்னை

இன்றிரவு முடி வெட்டலாம் என்று வீட்டிற்கு பக்கத்தில் இருந்த AC சலூன்க்கு சென்றேன். பின் தலையில் ரொம்ப நேரமும், சைடில் கொஞ்ச நேரம், நடுவில் சுத்தமாக வெட்டாமல், 'டன் சார்' என்றான்.

"என்னய்யா விளையாட்ரியா? சென்டர்ல வெட்டவே இல்ல? நல்லா வெட்டுய்யா"

"சார் சென்டர்ல" என இழுத்தான்.

"சென்டர்ல என்னய்யா?"

"சென்டர்ல வெட்டினா"

"சென்டர்ல வெட்டின என்ன? உன் சிஸர் உடஞ்சிடுமா?"

"இல்ல சார். சென்டர்ல இன்னும் வெட்டினா வழுக்கை நல்லா தெரியும்"

எனக்கு சுரீரென்று உரைத்தது. அவனை சொல்லிக் குற்றம் இல்லை. லேசான காற்றுக்கே என் நடு மண்டை முடி தனியாய் தூக்கிக்கொண்டு, பப்பரப்பே என்று வழுக்கை பல்லை இளிக்கும். அந்தக் கோலத்தில் ஒரு சில ஆபீஸ் நண்பர்களே என்னைப் பார்த்து, "இவருக்கு நடு மண்டையில் முடி இருந்தால் ஹார்ட்வேர் அருண் மாதிரி இருப்பார்ல?" என்று வெகுளியாக சொல்வார்கள்.

"சரி. அப்படியே வெட்டுங்க". ஒரு வழியாக 'கட்'டிங்கை முடித்து விட்டு வீடு செல்கையில், காலேஜில் முடி வெட்டியவரை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

தெனாலிராமன்

தெனாலிராமன்
===============

குழந்தைகளுக்காகப் படம் எடுப்பது ஒரு வகை என்றால், குழந்தைத் தனமாகப் படம் எடுப்பது மற்றொரு வகை. இதில் தெனாலிராமன் 90% இரண்டாவது வகையான படம். சிறு வயதில் நாம் படித்த தெனாலிராமன் நீதிக்கதைகளையே நீட்டி முழக்கி திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்த கதைகளின் இடையே, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற மாபெரும் பிரச்சினையைச் சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறார். அதற்கு இயக்குநருக்குப் பாராட்டுக்கள். ஆனால், படம் முழுவதையும் ரசிப்பதற்கு இந்த ஒரு அம்சம் போதாதே டைரக்டர் சார்?

3 வருட 'அம்மா' வனவாசத்திற்குப் பிறகு வடிவேலுவைத் திரையில் பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது. வடிவேலுவின் பெரும் பலமே அவரின் காமெடி ததும்பும் உடல் மொழிதான் (mannerism). வின்னர், தலைநகரம், இங்கிலிஷ்காரன்- இந்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் வசனத்தை விட அவரின் உடல் மொழியே அவருக்குப் பெயரை வாங்கித் தந்தது. ஆனால் இந்த படத்தில் பக்கம், பக்கமாய் வசனமாகப் பேசியே மாள்கிறார் வடிவேலு. நமக்கு தான் சிரிப்பு வரவில்லை. சரி திரைக்கதை? தெனாலிராமன் கதைகளை விடுத்துப் பார்த்தால், வடிவேலுவை வைத்து இதைவிட சீரியஸாக எடுக்க முடியாது என்பதால் இறுதி வரை எது சீரியஸ், எது காமெடி என்று குழம்புகிறது. முன்னமே சொன்னது போல் திரைக்கதை மொத்தமுமே அமெச்சூர் தனமாக இருக்கிறது. தேறுவது தேர்ந்த கலை இயக்கம், துல்லிய ஒளிப்பதிவு மற்றும் இமானின் பின்னணி இசை.

வடிவேலுவே பெரும்பான்மைத் திரைக்கதையை எடுத்துக் கொள்வதால் மற்ற எவரும் நடிப்பில் சோபிக்க வாய்ப்பில்லை. பிரியதர்ஷினிக்கு மட்டும் சற்று நல்ல பாத்திரம். ஹும், ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும், அவர்-ஹீரோயின். படம் முழுக்க தொப்புள் தெரிய வலம் வருவதாலோ என்னமோ, நடிப்பு, முக பாவம், லிப் சின்க் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை. சரி, அது தான் படம் முழுக்க வடிவேல் இருக்கிறாரே?

மொத்தத்தில் படம்? நீங்கள் சுட்டி டிவியில் வரும் டோரா- தி எக்ஸ்ப்லோரர் பார்த்து இருக்கிறீர்களா? நம்மால் 5 நிமிடம் கூடப் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் பயங்கரமாக ரசிப்பார்கள். அதே போல்தான் இந்த படமும். இதை குழந்தைகள் வெகுவாக ரசிக்கக் கூடும். ஆனால் நல்ல சினிமாவை எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். எனவே இது, குழந்தைகளுக்காக, குழந்தைகள் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.

பின் குறிப்பு: மான் கராத்தேவிற்கு 'தெனாலிராமன்' பல மடங்கு தேவலாம்.


Friday, April 4, 2014

மான் கராத்தே

நம் தமிழ் ஹீரோக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. இரண்டு படங்கள் ஹிட்டடித்தால் போதும். உடனே அடுத்த படத்தில் மாஸ் காட்ட நினைப்பார்கள். ஓப்பனிங் சாங், பஞ்ச் வசனம், குத்துப் பாடல், செண்டிமெண்ட் இவையெல்லாம் கண்டிப்பாய் வேண்டும் என கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன். ok, படம் எப்படி? லெட்ஸ் சீ!

ஒரு சில அறிமுக இயக்குனர்கள், அருமையான திரைக்கதையுடன் சில நல்ல முயற்சிகள் எடுத்து நம் சினிமாவை அடுத்த நிலைக்கு சில படிகள் மேலே கொண்டு சென்றால், சில பேர் இந்த மாதிரி குப்பை மசாலாக்களை எடுத்து பத்து படிகள் கீழிறக்கி விடுகின்றனர். அதிலும் 'மான் கராத்தே' பார்க்க முடியாத மொக்கையான குப்பை. நான் சமீபத்தில் பார்த்த 'புலிவால்' படத்தை விட மோசமான, படு அபத்தத் திரைக்கதையை இந்த படத்தில்தான் பார்த்தேன். இதில் கிக் பாக்ஸிங் பற்றி ஏதோ சொல்கிறேன் பேர்வழி என்று அந்த விளையாட்டை எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக் கேவலப்படுத்தி நாறடித்து விட்டனர். கிக் பாக்ஸிங் அமைப்புகள் இந்த படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தால் ஆச்சர்யம் இல்லை.

இந்த படத்தின் லட்சனத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளும் பாக்ஸிங் இறுதிப் போட்டியின் முடிவு பற்றியே தினதந்தியில் மூன்று பத்தி செய்திதான் வருகிறது. ஆனால் போட்டியின் லீக், அரை இறுதி மேட்ச்சுகள் பற்றி போட்டோவுடன், தலைப்புச் செய்தியே வருகிறதாம். இந்தியா டுடே, தி வீக் புத்தகங்களும் இதில் அடக்கம். நம்மையெல்லாம் அடிமுட்டாள்களை விட கேவலமாக நினைத்து விட்டார் இயக்குனர்.

படத்தில் வரும் காட்சி ஒன்று: இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஹன்சிகா எனக்குக் கிடைப்பார் என்று சொல்லி கிருஷ்ண வம்சியிடம் சென்று போட்டியில் இருந்து விலகிக் கொள்ள சிவகார்த்திகேயன் கேட்பார். அப்போது கோபமாக வம்சி, "உங்களுக்கெல்லாம் பாக்ஸிங்னா விளையாட்டாப் போச்சுல்ல" என்பார். இந்த கேள்வியை இயக்குனர் தனக்குக்தானே கேட்டுக்கொள்ளவும். ஏனென்றால், பாக்ஸிஙை அவ்வளவு அசிங்கப் படுத்திவிட்டார்.

இறுதியாக, இந்த படமெல்லாம் ஓடவே கூடாது. ஓடினால், நிறைய பேர் இந்த மாதிரி குப்பைகளை (படம்) எடுத்து நம் தலையில் கொட்டுவார்கள். அப்புறம் நம் சினிமாவின் தரம் மேலும் பல படிகள் சறுக்கி விடும். ஓடிவிட்டால்?? சுஜாதா சொல்வது போல் நம்மை பசித்த புலி தின்னட்டும்.