Monday, March 3, 2014

The Good, The OK, The Ugly

சென்ற வாரம் நான் பார்த்த மூன்று படங்களின் ரத்தினச் சுருக்கமே இந்த metaphor.

1. The Good---> 24 நார்த் காதம் (24 North Miles): பகத் பாசில், நெடுமுடி வேணு, சுவாதி- இவர்களின் அருமையான நடிப்பில் ஒரு பீல்-குட் படம். பாசில் அதீத சுத்தம் பேணும் ஒரு perfectionist. சுவாதி NGO-ல் வேலை செய்யும் ஒரு சமூக சேவகி. நெடுமுடி வேணு வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் ரிட்டயர்ட் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்குமாறு ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. அந்த பயணம் தான் படத்தின் திரைக்கதை. படத்தின் ஆதார பலம் அதன் தெளிவான திரைக்கதை மற்றும் காஸ்டிங். அந்நியன் அம்பி மாதிரியான ஒரு ரிசர்வ்ட் perfectionist பாசில், முடிந்த வரை பிறருக்கு உதவும் சுவாதி, மிகவும் பொறுமையோடு வாழ்கையை அணுகும் வேணு என முரணான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கோர்வையான திரைக்கதையில் அச்சத்தி விட்டார் இயக்குனர். இது இவரின் முதல் படம் என்பது மேலும் ஆச்சர்யம். தன் மனைவி இறந்தது தெரிந்து சாலையில் இருந்து வீட்டிற்கு நடந்து வரும்போதும், மனைவி உடலைப் பார்த்துவிட்டு தன் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்று கண்களாலேயே பேசுவது என வேணு நடிப்பில் பாசிலை விட ஒருபடி மேலே. மேலே சொன்ன காட்சியில் படத்தில் யாருமே அழ மாட்டார்கள். ஆனால் நான் அழுதுவிட்டேன். அதற்க்கு காரணம் வேணுவின் நடிப்பு + உள் மனதை வருடும் பின்னணி இசை. நிச்சயம் பாருங்கள். Rating: 4/5

2. The OK---> தெகிடி (Thegidi): மேம்போக்காக இந்த படம் பிடித்த மாதிரி இருந்தாலும், சற்று ஆழ்ந்து யோசித்தால் ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை மட்டுமே இதில் இருப்பதை உணர முடியும். ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், தான் உளவு பார்த்த நபர்கள் ஒவ்வொருவராய் கொல்லப்பட, அதன் மர்மத்தை ஆராய்கிறார். சதியை அடுத்த மூன்று காட்சிகளில் அறிந்து, நான்காவது காட்சியில் மெயின் குற்றவாளியைப் பிடித்து விடுகிறார். தட்ஸ் ஆல். கொலைகளின் காரணம் மட்டுமே புதுசு. மற்றபடி அதன் மரம்த்தை அவிழ்ப்பதை, திரைக்கதையில் இன்னும் சுவாரசியமாக, விரிவாக காட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஜனனி அய்யருடன் இரண்டு பாடல், இவர்களின் ரொமான்ஸ் என முதல் பாதி வேஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இடைவேளைக்கு சற்று முன்னர்தான் படம் ஆரம்பித்த மாதிரி எனக்கு தோன்றியது. எனினும் அபத்த மசாலா, காமெடி இம்சை இல்லாத ஒரு நீட் சஸ்பென்ஸ் த்ரில்லெர் என்ற முறையில் நம்பிப் பார்க்கலாம். Rating :3/5

3. The Ugly---> புலிவால் (Pulivaal): இந்த குப்பைக்கு 'மொண்ணை'வால்  என்ற டைட்டில் மிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன். ஒரு எலிமெண்டரி ஸ்கூல் ரேஞ்சில் திரைக்கதை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், ப்ளே ஸ்கூல் ரேஞ்சில் கூட இல்லை. ஒரு பணக்காரனின் செல்போன், அதுவும் அவனின் அந்தரங்க வீடியோ இருக்கும் செல்போன் கிடைத்தால் எவ்வளவு த்ரில்லிங்காய் திரைக்கதை அமைக்கலாம்? ஆனால் அதை வைத்துக்கொண்டு தனக்குப் பிடிக்காதவர்கள் மேல் சாணியைக் கரைத்து ஊற்ற சொல்கிறார் , கன்னத்தில் அறையச் சொல்கிறார் விமல். எனக்கென்னமோ 40 ரூபாய் கொடுத்து இந்த சாணியை என் தலையில் நானே ஊற்றி விட்டதாகத் தெரிந்தது. எப்போதும் பெருச்சாளியை விழுங்கின மாதிரி முழிக்கும் விமல், SMS கடி ஜோக்காக சொல்லி நம்மை நரகத்தின் வாசலுக்கு இழுத்து செல்லும் சூரி, நானும் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று அறுக்கும் தம்பி ராமய்யா என்று ஒவ்வொருவரும்  அவரவர் பங்குக்கு நம்மை கொந்தி எடுக்கிறார்கள். டிவியில் போட்டால் கூட பார்க்கக் கூடாத/முடியாத அமர காவியம் இந்த 'மொண்ணை' சாரி புலிவால். Rating- 1/5